தற்போதைய செய்திகள்

குக்கிராமங்களுக்கு புதிய மின்பாதை அமைக்க அரசு பரிசீலனை – சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தகவல்

சென்னை

குக்கிராமங்களுக்கு புதிய மின்பாதை அமைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி சட்டப்பேரவையில் நேற்று உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலுரை வருமாறு:-

எஸ்.ஈஸ்வரன்: பவானிசாகர் தொகுதி, தாளவாடி வட்டம், குத்தியாலத்தூர் ஊராட்சி, அணைக்கரை வழியாக திங்களூர் ஊராட்சி, கேர்மாளம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் ஆசனூர் பகுதி வழியாக 20 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனக்காட்டுப்பகுதி வழியாக மின்சாரம் வருவதால், அந்தப் பகுதியில் அடிக்கடி சூறாவளி காற்றும், மரங்கள் விழுந்தும் மின் ஒயர்கள் அறுந்து போவதால், இந்தப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க முடிவதில்லை. எனவே, இப்பகுதி மக்களுடைய நலன் கருதி, மிக அருகில் இருக்கிற அணைக்கரை வழியாக மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளுக்கும் சீரான மின்சாரம் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் சொன்ன மின்பாதை வனப்பகுதியில் வருகின்ற காரணத்தினால் இயற்கை சீற்றத்தின் காரணமாக மின் பழுது அடிக்கடி ஏற்படுகிறது. அதற்காக புதிய மின்பாதை வேண்டுமென்று கேட்டிருக்கிறார். இப்போது பெரும்பள்ளம் சப் ஸ்டேசனிலிருந்து தான் உறுப்பினர் சொல்கின்ற அந்த குக்கிராமங்களுக்கு மின்வசதி கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. புதிய மின்பாதை அமைக்க வேண்டுமென்று சொன்னால் வனத்துறையில் அனுமதி வாங்க வேண்டும், உச்சநீதிமன்றத்தின் ஆணை இருக்கிறது. வனத்துறையின் அனுமதியை பெற்று தேவைப்படின் அந்த குக்கிராமங்களுக்கு புதிய மின் பாதை அமைப்பதற்கு பரிசீலனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் 4, 5 குக்கிராமங்களுக்கு மின்வசதி இல்லை என்று சொன்னார்கள். இதுகாறும் எங்கள் கவனத்திற்கு வரவில்லை. இருந்தாலும் வனப்பகுதியிலே இருக்கின்ற கிராமமாக இருந்தால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி நாம் அங்கே உள்ளே கொடுக்க முடியாத காரணத்தினால் சோலார் லைட் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உறுப்பினர் இதுகாறும் என் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. அப்படி இருப்பின், அது உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, சோலார் லைட் கொடுப்பதற்குண்டான நடவடிக்கையை அம்மா அவர்களின் அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.ரகுபதி: என்னுடைய திருமயம் தொகுதிக்குட்பட்ட அரிமளம் மற்றும் தல்லாம்பெட்டி 33 கே.வி.ஏ. திறன் கொண்ட துணை மின் நிலையங்களிலிருந்து விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் ஒழுங்காக கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு 1 மணி நேரம், இரண்டு மணி நேரம் தான் மின்சாரம் வருகிறது என்று சொல்கிறார்கள்.

எனவே, அவர்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைப்பதற்காகவும், அந்த இரண்டு துணை நிலையங்களை தரம் உயர்த்தி தரவும், அதேபோல ஆத்தூரிலிருந்து வரக்கூடிய டிரான்ஸ்பார்மலிருந்து ஓவர்லோடு இருப்பதனால், தினசரி சட்டவுன் ஆகி விடுகிறது. ஒரு நாளைக்கு 10 முறை 15 முறை அங்கே மின்தடை ஏற்பட்டு விடுகிறது. எனவே அந்த ஆத்தூர் டிரான்ஸ்பார்மரை தரம் உயர்த்தித் தந்தால், அல்லது புதிதாக இன்னொரு டிரான்ஸ்பார்மரை அமைத்து தந்து அங்கேயிருக்கக்கூடிய அந்த பகுதி மக்களுக்கும் மின்தடை இல்லாமல் மின்சாரம் கிடைப்பதற்கு வேண்டிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் பி.தங்கமணி; பொதுவாக டெல்டா மாவட்டங்களுக்கு 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் தரப்படுகிறது. காற்றாலை மின்சாரம் கிடைக்கும் போது 24 மணிநேரமும் மின்சாரம் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. உறுப்பினர் சொல்லுகின்ற பகுதியில் மின்னழுத்தம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் மின்தடை ஏற்படுகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதை ஆய்வு செய்கிறோம். இன்னொன்று, ஆத்தூர் பகுதியிலே மின்மாற்றிகளில் அதிக பளு இருக்கின்ற காரணத்தினால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். இதுகாறும் எங்களுக்கு அப்படி தகவல் வரவில்லை. அதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து, அங்கேயிருக்கின்ற அதிகாரிகளிடம் பேசி அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பதிலளித்தார்.