தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறித்த தமிழக அரசின் புள்ளி விவரம் சரியானது- பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

சென்னை

பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறித்த தமிழக அரசின் புள்ளி விவரம் சரியானது என்று பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் என்பது 2016-17ம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்தது. 2018-ம் ஆண்டில் 14 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இடைநிற்றல் என்பது 2017-18-ம் ஆண்டில் 3.6 சதவீதமாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அமைச்சரோ 14 சதவீதம் என்கிறார். மத்திய அமைச்சர், தமிழக அமைச்சர் கூறியதற்கு வித்தியாசம் உள்ளது. இதற்கு என்ன காரணம்? என்று துணை கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், மத்திய அரசுக்கு நாம் தான் புள்ளி விவரங்களை வழங்கி வந்தோம். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மூலம் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆன்லைனில் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இடைநிற்றல் குறைவாகும். தமிழகத்தில் தற்போது இடைநிற்றல் 3.7 சதவீதமாக உள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். நமது புள்ளிவிவரங்கள் சரியானது. பீகார் மாநிலத்தில் இடைநிற்றல் 39.6 சதவீதமாக உள்ளது. இதுதான் இந்தியாவில் அதிகமான இடைநிற்றல் உள்ள மாநிலம். எனவே இடைநிற்றல் குறித்த தமிழக அரசின் புள்ளிவிவரம் சரியானதுதான் என்று தெரிவித்தார்.