ராமநாதபுரம்

ராமநாதபுரம் வருகை தரும் முதல்வர், துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு – மாவட்ட கழகம் முடிவு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உற்சாக வரவேற்பு அளிக்க ராமநாதபுரம் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைப்பது தொடர்பான அரசாணையை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் ஊராட்சியில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக 22 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 345 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதையொட்டி பட்டிணம்காத்தான் ஊராட்சிக்குட்பட்ட அம்மா பூங்கா அருகே மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவினை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகிற மார்ச் 1-ந்தேதி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டும் இடம், முதல்வர் வரும் பாதை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஆகியோர் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 1-ந்தேதி முதல்வர் வருவதையொட்டி நேற்று காலை 9.30 மணி முதல் 10 மணி வரை உள்ள சுப முகூர்த்த வேளையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏமுனியசாமி முன்னிலையில் பந்தல்கால் எனப்படும் முகூர்த்தகால் நடப்பட்டது.

பின்பு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏமுனியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒரு சிறப்பு நமது மாநிலத்திற்கு உண்டு. தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்த பெருமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியையே சாரும். இதன் முதல் நிகழ்வாக வருகிற மார்ச் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் வருகை தரவுள்ளார். நமது மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

மேலும் ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூபாய் 3,041 கோடி செலவில் நாளொன்றில் 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இரண்டு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க நிதி ஒதுக்கியும், ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.9.80 கோடி ஒதுக்கியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்றும் நடைபெற்ற 2020- 21 பட்ஜெட்டில் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இதுபோன்ற புதிய திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு ராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மாவட்டக் கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.