தமிழகம்

செப்.9 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை:-

செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போது வெப்ப சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் பெய்து வரும் மழை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறையும் என்றும், அதன் காரணமாக மும்பை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் முதல் மழை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் ஜி பஜாரில் 15 சென்டி மீட்டர் மழையும், நடுவட்டத்தில் 11 சென்டிமீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளன.