கடலூர்

பள்ளிகளுக்கு எந்த உதவியும் செய்ய தயார் – சிதம்பரம் எம்.எல்.ஏ. கே.ஏ.பாண்டியன் உறுதி…

கடலூர்:-

பள்ளிகளுக்கு எந்த உதவியும் செய்யத் தயார் என்று சிதம்பரம் எம்.எல்.ஏ. கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் உமாராணி, பச்சையப்பன் பள்ளி தலைமையாசிரியர் சரவணன், நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஹேமா, ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு சிதம்பரம் நகரத்தில் உள்ள ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியின் 697 மாணவர்கள், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியின் 176 மாணவர்கள், நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 453 மாணவர்கள், நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 440 மாணவர்கள், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 1931 மாணவிகள், வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியின் 203 மாணவர்கள், அண்ணாமலை ராணி சீதை ஆட்சி பள்ளிக்கு 396 என 4296 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினிகளை வழங்கினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பேசுகையில், மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் சிந்தனையில் உதித்த உயர்ந்த திட்டம் தான் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டம். உலகத்தை சுருக்கி உங்கள் கைகளில் கொடுத்து இருக்கின்றோம். இதை வைத்து நீங்கள் உங்கள் அறிவை பெருக்கி உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை. இதை நீங்கள் பயன்படுத்தி நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டும். சிதம்பரத்தில் உள்ள பள்ளிகளுக்கு எந்த நலத்திட்டம் வேண்டும் என்று என்னை தொடர்பு கொண்டாலும் அதை உடனே செய்து தர நான் தயாராக உள்ளேன் என்று பேசினார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார், சி.சி.எம்.எஸ். தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, ஆவின் தலைவர் பன்னீர்செல்வம் பரங்கிப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அசோகன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி, கணேஷ், நிர்வாகிகள் வீரமணி, தில்லை சேகர், வேணு புவனேஸ்வரன், தன. ராஜேந்திரன், சங்கர், கருப்பு ராஜா, பாலமுருகன், சக்திவேல், மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் சிதம்பரம் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி நன்றி கூறினார்.