சிறப்பு செய்திகள்

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம் -முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிதலைமைச் செயலகத்தில், சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார் மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பவியல் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கல்விக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

பழந்தமிழரின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தும் பணிகளை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் இந்திய தொல்லியல் துறை 2014-2015, 2015-2016, 2016-2017 ஆகிய மூன்று ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொண்டு உள்ளது. இந்த அகழாய்வுகளில் 7818 தொல்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு கீழடியில் சங்ககால (வரலாற்றுத் தொடக்ககாலம்) மக்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன.

இச்சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வினை மேற்கொள்ள மத்தியத் தொல்லியல் ஆலோசனைக் குழுவின் அனுமதியினைப் பெற்றது. இந்த நான்காம் கட்ட அகழாய்விற்கு தமிழ்நாடு
அரசு 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அகழாய்வு நெறிமுறைகளின்படி 2018-2019-ம் ஆண்டில் நான்காம் கட்ட தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த அகழாய்வில் 34 குழிகள் அமைக்கப்பட்டு 5,820 தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமானப் பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன. இவற்றில் தங்கத்திலான அணிகலன்களின் உடைந்த பாகங்கள், செம்பிலான பொருட்கள், பல்வேறு வகையான மணிகள், சுடுமண்ணாலான உருவங்கள், தந்தத்திலான பொருட்கள், ஆட்டக்காய்கள், தக்களிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். மேலும், தமிழி எழுத்துப்பொறிப்பு கொண்ட 56 பானை ஓடுகள், 1001 குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன் இரண்டு உறை கிணறுகளும் வெளிப்படுத்தப்பட்டன.

இந்த நான்காம் கட்ட அகழாய்வினை அடுத்து, 2018-2019-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வினை விரிவாகவும் சீரிய முறையிலும் மேற்கொள்வதற்காக 47 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால், ஐந்தாம் கட்ட அகழாய்வு செய்வதற்குரிய இடங்களை தேர்வு செய்வதற்கு பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, களஆய்வுகளை மேற்கொண்டு, அதன்படி இடங்களை தேர்வு செய்து, அகழாய்வு நெறிமுறைகளின்படி அகழாய்வு செய்யப்பட்டன.

இந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இக்கட்டுமானங்கள் செங்கல்லிலான திறந்த நிலையிலான வாய்க்கால், மூடிய நிலையிலுள்ள வடிகால், சுருள் வடிவிலான சுடுமண் குழாய் போன்ற வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன. இவை அன்றைய நீர் மேலாண்மையை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும், 16 மீட்டர் நீளத்தில் ஒற்றை அடுக்குடன் கூடிய சுவர், இரண்டு உறைகிணறுகள், செங்கல் கொண்டு கட்டப்பட்ட தொட்டி போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுடுமண் உருவங்கள், மணிகள், செப்புக்காசுகள், இரும்புப் பொருட்கள், வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், எலும்பு முனைகள், சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள், தந்தத்திலான பொருட்கள் போன்ற ஏறத்தாழ 900 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வில் அகழ்வாய்வு ஒரு முக்கியப்பணி என்றால் அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட பொருள்களை காலக் கணிப்புக்கு உட்படுத்துவது மற்றொரு முக்கிய பணியாகும். உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்களில் இவை ஆய்வு செய்யப்படுகின்றன. கீழடியில் கீழ்மட்ட அடுக்கில் எடுக்கப்பட்ட கரிப்பொருள் ஒன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் புளோரிடா மாநிலத்தில் மியாமி என்ற நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

இக்கரிமத்தின் காலம் கி.மு.580 என்பது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழடியில் 2,600 ஆண்டுகள் பழமையான நாகரிகம் நிலவியது என்பதையும், இவை முதிர்ச்சியடைந்த சமூகத்தின் முன்னேறிய தொழில்நுட்ப வளர்ச்சி என்பதையும் பறைசாற்றுகின்றது. இக்கீழடி அகழாய்வினை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அனைவரும் நேரடியாக பார்வையிட்டுப் பயனடையும் வகையில், முதலமைச்சரால் 1.11.2019 அன்று மதுரை, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சி காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைக்கப்பட்டது. இச்சிறப்புமிக்க கண்காட்சியினை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.

கீழடி, கோயில் நகரமான மதுரைக்கு மிக அருகிலுள்ள பகுதியாகும். இங்கு வரலாற்றுத் தொன்மை கொண்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றதன் மூலம், பண்டைய தமிழர் நாகரிகத்தின் பண்பாட்டு வளம் சுட்டிக் காட்டப்படுவதால் கீழடியில் மறைந்துள்ள பண்பாட்டு மதிப்புறுப் பொருட்களை தேடும் பணிகளை எதிர்காலத்தில் தொடர்வதும், பண்டைய சமூகத்தின் பண்பாட்டு வளங்களை வெளிப்படுத்துவதும் காலத்தின் அவசியத் தேவை என்ற அடிப்படையில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம் மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம் மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

அதுமட்டுமின்றி, 2019-2020-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமணல் ஆகிய நான்கு இடங்களில் முறையான தொல்லியல் அகழாய்வுகளை மேற்கொள்ளவும், புதிய கற்கால இடங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ளவும், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தினை கண்டறிய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ளவும் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தற்போது மேற்கண்ட அனைத்து இடங்களிலும் தரை ஊடுருவல் தொலையுணர்வி மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகனம் மதிப்பாய்வு போன்ற பல்வகை தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அகழாய்வு செய்வதற்குரிய சரியான தொல்லியல் இடத்தை அடையாளம் கண்டறியும் பணியும் நிறைவடைந்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பவியல் நிறுவனத்தில் மூன்றாண்டு பட்டப் படிப்பு, ஒன்றரை ஆண்டு பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அளிக்கப்படுவதுடன், ஓட்டல் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டம் மற்றும் திறன்சார் பயிற்சித் திட்டங்களின் கீழ், திறன் சாராத நபர்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் அனைத்து விதமான சுற்றுலா விருந்தோம்பல் கல்விக்கான சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பவியல் நிறுவனத்தில், 5 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் வகுப்பறை, கலந்தாய்வு கூடம், ஆசிரியர்கள் அறை, பயிற்சி உணவுக்கூடம், மாணவர் செயல்பாட்டு அறை, மாணவர் சமையல் பயிற்சிக் கூடம், அடுமனை பயிற்சிக் கூடம், விருந்தினர் முன்மாதிரி ஓய்வறை. மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், புதிய உபகரணங்கள் மற்றும் மரச்சாமான்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு, 125 கிலோவாட் திறன் கொண்ட புதிய ஜெனரேட்டர் போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கல்விக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அஷோக் டோங்ரே, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர்/ஆணையர் த. உதயச்சந்திரன், சுற்றுலாத் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வி.அமுதவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.