திருவள்ளூர்

ஆண்டு முழுவதும் அம்மா பிறந்தநாள் விழா – திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் முடிவு

திருவள்ளூர்

ஆண்டு முழுவதும் அம்மா பிறந்தநாள் விழாவை கொண்டாட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்தும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பாடிய நல்லூரில் உள்ள அங்காள ஈஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் காசுஜனார்தனம் தலைமை வகித்தார்.

மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊரகத் தொழில் துறை அமைச்சரும் மதுரவாயல் பகுதி கழக செயலாளருமான பா. பென்ஜமின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அமைச்சர் க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

தமிழகத்தில் ஆள தகுதியான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற இயக்கம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நல் ஆளுமைக்கு பெயர்போன அரசாக இந்த அம்மாவின் அரசு திகழ்கிறது.அம்மா அவர்களின் பிறந்தநாளை கழகத்தின் கிளை கழக செயலாளர் முதல் கழகத்தின் அடிமட்ட தொண்டர்கள் முதல் அனைவருமே தன்னுடைய பகுதிகளில் கழகக் கொடியை ஏற்றி கழக கொடிக்கம்பத்தில் வண்ணம் பூசி அம்மா அவர்களின் படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு பேனா பென்சில் வழங்க வேண்டும், முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்க வேண்டும், அண்ணா திமுக தொண்டனை மிஞ்சுவதற்கு இந்தியாவில் எந்த ஒரு தொண்டர்களும் திராணியில்லை. அந்தளவுக்கு அண்ணா திமுக தொண்டன் உறுதி மனப்பான்மையோடு பணியாற்றுவான். எனவே வரும் மாநகராட்சி தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர்களிக்கு துணையாக இருந்து அவரின் வெற்றிக்கு பாடுபடுங்கள். அந்த வெற்றியை அம்மாவின் பொற்பாதத்தில் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

கூட்டத்தில் அம்மா அவர்களின் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பகுதி நகரம் ஒன்றிய வார்டு அனைத்து பகுதியிலும் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தமைக்காகவும், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுத்தந்து குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி பெற்று தந்தமைக்காவும் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.