தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை – பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை:-

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சட்டமன்ற பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார் மற்றும் மெ.ஆ.ஆண்டி ஆம்பலம் ஆகியோர் எழுப்பிய சிறப்பு கவன தீர்மானத்தின் மீது பின்வருமாறு பதிலுரைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,779 குடியிருப்புகள் உள்ளன. இம்மாவட்டத்தில் இயல்பை விட, 27 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 27 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம், 12 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், 49.29 மில்லியன் லிட்டர் குடிநீர், தினமும் வழங்கப்படுகிறது.

இக்கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நீராதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 5 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 54 கூடுதல் நீராதாரங்களும், 4 புதுப்பிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நடப்பு நிதியாண்டில், 12 கூட்டு குடிநீர் திட்டங்களில், 8 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 14 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 6 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் கூட்டு குடிநீர் திட்டம், நத்தம் கூட்டு குடிநீர் திட்டம், பழநி குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், வடுகப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம், சீரான முறையில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
பழனி நகராட்சியில், கோடைகால நீர் தேக்கத்தினை விரிவுப்படுத்துதல், உள்ளிட்ட குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

46 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கொடைக்கானல் நகராட்சி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தில், 94 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளன. மே, 2020-ல் பணிகள் முடிவடையும். திண்டுக்கல் மாநகராட்சிக்கான தனி குடிநீர் திட்டம், 70 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு, 10.01.2019 அன்று முதல் பயன்பாட்டில் உள்ளது.ஆத்தூர் குடிநீர் திட்டத்தில், ஆத்தூர் அணையின் தென்புறம், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.6 டி.எம்.சி. நீரினை கூடுதலாக தேக்கும் வகையில், கூடுதல் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகள்

ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் நத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் உள்ள குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, 6 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் 15.03.2020-க்குள் நிறைவு பெற உள்ளன.

மேலும், ஊராட்சிப் பகுதிகளில் கனிம நிதியின் மூலம், 9 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன ஆய்வில் உள்ள பணிகள் பாலசமுத்திரம் பேரூராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம், 9 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசாணை வழங்கப்படும் நிலையில் உள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாநகராட்சி, 7 பேரூராட்சிகள் மற்றும் 816 ஊரக குடியிருப்புகளுக்கான, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நீராதாரத்தை மேம்படுத்த, 72 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில், விரிவான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிர்வாக அனுமதி வழங்கும் நிலையில் உள்ளது. கொடைக்கானல் நகராட்சியில், கோடைகால நீர் தேக்கத்தின் கரைகளை உயர்த்தி, கூடுதலாக தண்ணீரை தேக்குவதற்கான பணிக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருத்திய நிர்வாக அனுமதி வழங்கும் நிலையில் உள்ளது.

நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளில், குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, பற்றாக்குறை உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, 5 கோடியே 96 லட்சம் ரூபாய் கோடி மதிப்பீட்டில், 323 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 158 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 165 பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை, பேரவைத் தலைவர் வாயிலாக, உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.