சிறப்பு செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு – பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

சென்னை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி பேசுகையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சினை
இருக்கிறது. நிதி இல்லாததால் அவர்கள் தவிக்கிறார்கள், தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போதுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் துறை வாரியான மானியக் கோரிக்கையின் போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி
முழுமையாக விடுவிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய ராமசாமி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் இரண்டு முறை ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் உள்நோக்கத்துடன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலை அதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் தான் நடத்துகிறது, அந்த ஆணையம் சுயாட்சியான அமைப்பு. அந்த ஆணையம் தான் அது குறித்து முடிவெடுக்கிறது என்றார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், திமுக ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் என்பது எப்படி நடந்தது என்பது தெரியும். இதில் உள்நோக்கமும் இல்லை. வெளிநோக்கமும் இல்லை. சரியான முறையில் தான் தேர்தல் நடத்தப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. செய்ய வேண்டிய பணிகள் குறித்த கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி , அங்கு இரண்டு முறை தேர்தல் ஏன் தள்ளிவைக்கப்பட்டது
என்பது மாவட்ட அமைச்சருக்கு தெரியும், என்றும் மூன்றாம் முறையாவது தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.