சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் மின்சார வாகனங்கள் உற்பத்தி : இரண்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை.

சான்ஃபிரான்சிஸ்கோ

அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் புகழ் பெற்ற டெஸ்லா மற்றும் ப்ளூம் எனர்ஜி நிறுவனங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்கள், மின் கட்டமைப்பு தொடர்பான வழிமுறைகள் ஆகியவற்றை தமிழகத்தில் தொடங்குவதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளைப் ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 5.9.2019 அன்று அமெரிக்கா நாட்டின், சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு சென்று, சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையிலும், அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பாட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அமெரிக்க நாட்டின், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு, மாசில்லா எரிசக்தியை ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும், அத்தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

ப்ளூம் எனர்ஜி நிறுவனமானது, திட ஆக்சைடு எரிபொருள் செல்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளின் போது, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு, முதலமைச்சரின் செயலாளர்கள் முனைவர் எஸ்.விஜயகுமார், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.