தற்போதைய செய்திகள்

மரக்கன்று வளர்த்தால் நம்மை வரும் தலைமுறை வாழ்த்தும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

விருதுநகர்

மரக்கன்றுகள் வளர்த்தால் நம்மை வரும் தலைமுறை வாழ்த்தும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

உலகளவில் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபட்டு வருவதால், அவற்றை தடுப்பதற்கு ‘மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம்’ என்று உலக சுகாதார ஆய்வு மையம் அறிவுறுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் அபாயம் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இதனால் பருவ மழையின் அளவு குறைகிறது. இந்நிலையில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் பல்வேறு கிராமங்களில் தனியார் அமைப்புகள் மூலமாகவும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலமும் மரக்கன்று வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சில ஊராட்சிகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மரக்கன்று வைத்து வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஆனையூர், பூவநாதபுரம், மண்ணுக்குமீன்டான்பட்டி போன்ற கிராமங்களில் மரக்கன்று நடுதல், பராமரிப்பு பணிகள் மிகவும் ஆர்வமுடன் செய்யப்பட்டுள்ளன. இதில் சில ஊராட்சிகளில் கிராம மக்களின் ஆர்வம் அதிகமாக உள்ளன. பூவநாதபுரம், மண்ணுக்குமீன்டான்பட்டி உட்பட கிராமங்களில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில் விஸ்வ வனம் அமைப்பு சார்பாக மரக்கன்று நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மரக்கன்று நடும் விழாவை தொடக்கி வைத்து பேசியதாவது:-

உலக வெப்பமயமாகுதலை தடுக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் பழக்கம் நம்மிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மரக்கன்று நடுவதிலும் அதை பராமரிப்பதிலும் அதிமுக அரசு மிகவும் ஆர்வமுடன் செயலாற்றி வருகிறது.
சிவகாசி பகுதியில் மரக்கன்றுகள் வளர்க்கும் பழக்கம் அதிகரித்து வருவது சந்தோசமாக உள்ளது. நாம் வளர்க்கும் மரக்கன்று வரும் தலைமுறையும் நம்மை வாழ்த்தும். ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன், ஒன்றிய கழக செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆரோக்கியம் மற்றும் விஸ்வ வனம் அமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.