தூத்துக்குடி

தூத்துக்குடியில் தினமும் 50,000 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்ய இலக்கு – சேர்மன் என்.சின்னத்துரை தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சேர்மன் என்.சின்னத்துரை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைமையகத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஆவின் சேர்மன் என் சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது. பொது மேலாளர் திரியேகராஜ் தங்கையா, மார்க்கெட்டிங் மேனேஜர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஆவின் சேர்மன் என்.சின்னத்துரை பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு தினமும் ஆவின் பாக்கெட் பால் 50 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாங்கள் தினமும் அதிகாலையிலேயே உங்கள் கடைகளுக்கு நேரடியாக வந்து ஆவின் பால் விற்பனை செய்யும் முறையையும் அறிமுகப்படுத்த உள்ளோம். ஆகவே அதிக விலையுள்ள தனியார் நிறுவனத்தின் பாலை உபயோகப்படுத்தும் ஓட்டல் உரிமையாளர்களாகிய நீங்கள் தமிழக அரசின் ஆவின் பாலை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கர் மற்றும் ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் செந்தில் ஆறுமுகம், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.