சிறப்பு செய்திகள்

மத்திய அரசிடமிருந்து நிலுவை தொகைகளை பெற அரசு பல்வேறு கட்ட நடவடிக்கை – பேரவையில் துணை முதல்வர் தகவல்

சென்னை

மத்திய அரசிடமிருந்து நிலுவை தொகைகைளை பெற அரசு பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலுரை வருமாறு:-

உள்ளாட்சி நிதி மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரியில் 10,447 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து நிலுவையில் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு மாநில அரசுகளின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியம் மற்றும் செயல்திறன் மானியம் எனும் இருவகையான மானியங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டினைப் பொறுத்த வரையில் 2018-2019 ஆம் ஆண்டு வரையிலான அடிப்படை மானியம் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

செயல் திறன் மானியங்களை பொறுத்தவரையில் மத்திய அரசால் 2017-2018 ஆம் ஆண்டு முதல் இம்மானியம் எந்த ஒரு மாநிலத்திற்கும் விடுவிக்கப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மானியமாக 4,345.57 கோடி ரூபாயும், செயல்திறன் மானியமாக 2017-18 ஆம் ஆண்டு முதல் 2,029.22 கோடி ரூபாயும் மத்திய அரசால் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலுவைகளை பெறுவதற்கு மாநில அரசு, மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 15-ஆம் நாள் வரை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரியினை செயல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டுத் தொகையாக 3,794.13 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து நிலுவையில் இருந்தது. இந்த அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17 ஆம் நாள் மத்திய அரசு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டுத் தொகையாக 1,826.03 கோடி ரூபாய் விடுவித்துள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகள் வரியினை செயல்படுத்தியதால், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டுத் தொகையான 1,967.10 கோடி ரூபாய் மட்டுமே தற்போது மத்திய அரசிடமிருந்து நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையும் இந்த நிதியாண்டின் முடிவுக்குள் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

2017-18 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தொகையாக 4,073 கோடி ரூபாய், மத்திய அரசிடமிருந்து நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத் தொகையை நமது மாநிலத்திற்கு விரைவாக விடுவிக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அம்மா அவர்களின் அரசு எடுத்த தொடர் முயற்சியின் பலனாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, பொருட்கள் மற்றும் சேவை வரி மன்றத்தால் அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசு, மத்திய அரசிடமிருந்து இந்நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை, பல்வேறு உயர்மட்ட நிலைகளில் எடுத்து வருகிறது தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.