சிறப்பு செய்திகள்

அரசு எடுக்கும் நல்ல முயற்சிகளை சிலர் அணை போட்டு தடுக்க முயற்சி – பேரவையில் துணை முதல்வர் குற்றச்சாட்டு

சென்னை

தமிழக அரசின் பட்ஜெட் மக்களின் மனதை கவரக்கூடிய பட்ஜெட் என்றும் அரசு எடுக்கும் நல்ல முயற்சிகளை சிலர் அணை போட்டு தடுக்க முயற்சிக்கின்றனர் என்றும் சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலுரை வருமாறு:-

திமுக ஆட்சிக் காலமான 2006-2007 ஆம் ஆண்டு முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை மொத்தம் கடனாகப் பெறப்பட்ட தொகை 43,892.29 கோடி ரூபாய் ஆக இருந்ததாகவும், 47,029.31 கோடி ரூபாய் மூலதனச் செலவிற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், 2011-12 ஆம் ஆண்டு முதல் 2015-16 ஆம் ஆண்டு வரை அம்மா அவர்களது ஆட்சிக் காலத்தில் மொத்தக் கடனாகப் பெற்ற தொகை 1,09,716.52 கோடி ரூபாய் என்றும், மற்றும் மூலதனச் செலவினங்கள் மொத்தம் 97,126.06 கோடி ரூபாயாக இருந்தது என்றும் உறுப்பினர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,34,685.68 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, 85,331.35 கோடி ரூபாய் மட்டுமே மூலதனத் திட்டங்களுக்குச் செலவிடப்பட்டது என்றும் ஒரு வாதத்தை முன்வைத்தார். அதாவது, மீதமுள்ள நிதி, தேவையற்ற செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் செலவுகளுக்காக ஒதுக்கப்படவில்லை என்பது போன்ற ஒரு கண்ணோட்டத்தில் அவ்வாறு பேசினார்.

ஆனால், அத்தகைய வாதம் முற்றிலும் தவறானதாகும். ஏனென்றால், தமிழக அரசால் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களுக்கான நிதிகள், வருவாய்க் கணக்கிலும் செலவிடப்படுகின்றன. குறிப்பாக, கல்வி, சுகாதாரம் விலையில்லா ஆடுகள்- மாடுகள் வழங்கும் திட்டம், மற்றும், வேளாண்மை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், ஆகிய அனைத்துமே வருவாய் கணக்கில்தான் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் வீட்டுவசதித் திட்டம் போன்ற சில திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி, முதலீட்டுக் கணக்கில் சேர்க்கப்பட்டது. இந்த திட்டத்தின் மீதான செலவினம் மூலதனக் கணக்கில் சேர்க்கப்படக்கூடாது என்றும், அதை வருவாய்க் கணக்கில்தான் கணக்கிட வேண்டும் என்றும், மாநில கணக்காயர் குறிப்பிட்டதன் பேரில், எங்கள் ஆட்சிக்காலத்தில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டம், போன்ற திட்டங்கள் அனைத்தும் வருவாய்க் கணக்கில்தான் சேர்க்கப்படுகின்றன. எனவே, பல மூலதன சொத்துக்களை உருவாக்கும் திட்டங்கள் கூட வருவாய்க் கணக்கில்தான் சேர்க்கப்படுகின்றன. உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் இதைக் குறிப்பிடுகிறேன்.

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பல்வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் உதவி அளிக்கின்றன. இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளும் வருவாய் கணக்கில்தான் சேர்க்கப்படுகின்றன. சுகாதாரத் துறை, கல்வித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசின் வரவு செலவுத் திட்டத்தில் கடன் மூலமாக வரவு வைத்து, வருவாய் கணக்கில் செலவு கணக்கிடப்பட்டு வருகிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடனுதவி மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், வளர்ச்சித் திட்டங்களை அம்மா அவர்களது அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன் மூலம் மாநிலத்தின் வரி வசூல் பெருகி இறுதியில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துகிற திறன் நம் மாநிலத்திற்கு இருக்கிறது என்கிற அடிப்படையில் தான் கடன் உதவியை பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. எனவே, கடனைப் பெற்று நாங்கள் மூலதன செலவுகளை மட்டும் செய்யாமல் வருவாய் கணக்கில் செலவு செய்கிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டை சொல்வது ஒரு தவறான கருத்தாகும்.

கடனாகப் பெறப்படும் நிதி, வளர்ச்சிப் பணிகளுக்காக மட்டும் செலவிடப்படும். உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம், 2685.91 கோடி ரூபாய் மொத்தச் செலவிலும், தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டம், 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில், உலக வங்கி நிதியுதவியுடன் 918.20 கோடி ரூபாய் செலவிலும், செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டங்களில் பெரும்பாலான பணிகள் வருவாய்க் கணக்கில்தான் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு, கடன் மற்றும் வட்டித் தொகைகளை திரும்பச் செலுத்தும் திறன் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதால், கடனுதவி அளிக்க பல பன்னாட்டு நிதி நிறுவனங்கள் முன்வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒரு சில ஊடகங்களில் இந்த நிதிநிலை அறிக்கையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதை ஒரு குறையாக சுட்டிக்காட்டி உள்ளனர். எனக்கு என்ன புரியவில்லை என்றால், கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தால், “அதை ஏன் அறிவித்தீர்கள்? பற்றாக்குறையைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா? நீங்கள் கடன் சுமையை அதிகரித்துக் கொண்டு போகிறீர்கள்” என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். அரசு சிறப்பாக செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்காக போதிய நிதி உதவி ஒதுக்கப்பட்டு, அத்திட்டங்களை மேலும் செம்மையாகச் செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யும் நிதிநிலை அறிக்கை தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அரசின் உண்மையான நிதி நிலைமையை வெளிப்படையாகத் தெரிவித்து எந்த அளவிற்கு பற்றாக்குறை உள்ளது, எவ்வாறு அரசு இதை சமாளித்துக் கொண்டிருக்கிறது என்ற தெளிவான சிந்தனையோடு இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொறுப்புணர்வோடு தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கவர்ச்சிகரமான திட்டங்கள் ஏதும் இல்லை என்ற ஒரு குறையை கூறுகிறார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்களது அரசு, மக்களின் உண்மைத் தேவையை அறிந்து அதை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை எடுக்கும். வேண்டும் என்றே மக்கள் மனதை தவறான வழியில் கவர்வதற்காக தேவையற்ற திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசு அல்ல, அம்மாவின் அரசு. எனவே பொறுப்புணர்வோடு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு பாராட்ட வேண்டுமே தவிர, இல்லாத குறைகளைக் கூறி தவறான கருத்துக்களைப் பரப்பக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது மக்களின் மனதைக் கவரக்கூடிய பட்ஜெட் ஆகும். ஒரு அரசு சரியாகச் செயல்படுகிறதா, மக்களுக்காக பாடுபடுகிறதா இல்லையா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். அம்மா அவர்களின் அரசு அற்புதமான அரசு. அனைத்து மதத்தினரையும், அனைத்து சமுதாயத்தினரையும், அனைத்து தரப்பு மக்களையும், அரவணைக்கிற அரசு அம்மா அவர்களது அரசு என்று மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பொறுக்க முடியாத சிலர், மாண்புமிகு அம்மா அவர்களது அரசின் செயல்பாடுகளை தடுக்கவும், பெற்றிருக்கும் நல்ல பெயரைக் கெடுக்கவும், பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எடுக்கின்ற நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அணை போட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.