தற்போதைய செய்திகள்

புத்தகங்கள் வாங்கும் செலவு இழப்பு அல்ல, வாழ்க்கையின் மூலதனம் – டாக்டர் வைகைச்செல்வன் பேச்சு…

மதுரை:-

புத்தகங்கள் வாங்குவதற்கான செலவு இழப்பு அல்ல, அது வாழ்க்கையின் மூலதனம் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் கூறினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 14-வது புத்தக திருவிழா, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவின் 8ம் நாளான நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற சொற்பொழிவில், முன்னாள் அமைச்சரும், கழக செய்தித் தொடர்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

புத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தர போராடியுள்ளார்கள், வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்கள்! புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளைத் தீர்க்க நல்ல வழியை நயம்பட சொல்லும். ஏனெனில், புத்தகங்கள் என்பது விதை போன்றது. எப்படி விதைகளை மண்ணுக்குள் மூடி வைத்தாலும், அவை மண்ணை விட்டு வெளிவருகிறதோ, அதைப் போலத்தான் புத்தகங்களும்.

“அணுகுண்டு ஒரு முறைதான் வெடிக்கும், ஆனால் புத்தகங்கள் அதனை திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்” என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன். முன்னோர் தம் அறிவையும் அனுபவத்தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலை படைத்தவனும் நூலை படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் மீண்டும் மீண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள்.

மன சோர்விலும், இறுக்கத்தில் உழலும்போதும் நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கும். நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம். அதைப் போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்கிட தரப்படும் பணம், செலவு அல்ல, மூலதனமாகும்! அது, வட்டியை ஈட்டித் தருவதைப்போல அறிவை பெருக்கச் செய்யும் மூலதனம்!

‘நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை’ நல்ல நண்பர்களை போலவே, இடர் மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள் கொடுத்து நிற்பவையும் நல்ல புத்தகங்கள்தாம்.ஏனெனில், புத்தகங்கள்தாம் அறிவு புதையல்கள், நம் நம்பிக்கை மாளிகையின் கதவுகள், அவை நம்மை சாதிக்கத் தூண்டும் கிரியா ஊக்கிகள்.

புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல. அவைதான் அறிவின் ஊற்றுக் கண்கள். அறிவை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளாகும்.  அறிவுக்கும், அறியாமைக்கும் போர் ஏற்படும் போதெல்லாம் இந்த ஏவுகணைகளே ஏவப்படுகின்றன. இங்கே அழிவு ஏற்படுவதில்லை. அறிவே ஏற்படுகிறது. புதிய உலகம் உருவாகிறது. புதிய மனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். புதிய பாதைகள் போடப்படுகின்றன.

நல்ல விதைகளை விதைக்கின்ற புத்தகங்களே ஒரு சமுதாய மாற்றத்தை உண்டாக்கும் திறன் படைத்தவையாகும். சில புத்தகங்கள் ஜீரணித்துக் கொள்ளத் தக்கவை. சில புத்தகங்கள் படித்து மகிழத் தக்கவையாகவும், சில புத்தகங்கள் வாழ்வின் திசையை மாற்றும் சக்தி கொண்டவையாகவும் திகழ்கின்றன. நல்ல புத்தகங்களை படிப்பதால், ஒருவர் நல்ல குடிமகனாகவும், தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை படிப்பதால், ஒருவர் வெற்றி வீரனாகவும் வலம் வர முடியும். புத்தகங்களை வாசிப்பதால், அவை மனதிற்கு அமைதியை தருவதோடு, மனநலத்தையும் விரிவாக்கும் சக்தி கொண்டவையாகவும், வாழ்க்கை நலத்திற்கு வழி காட்டுபவையாகவும் திகழ்கின்றன.

வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தை கையிலெடுத்து படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம்.

அணுவில் தொடங்கி அண்டம் வரையிலான மாபெரும் இயக்கத்தை பற்றிய பிரமிப்பு, நம் உடலை பற்றி, நம் பரிணாம வளர்ச்சியை பற்றி, உலகைப்பற்றி, பிரபஞ்சத்தை பற்றிய பிரமிப்பு, நாம் அனைத்துடனும் தொடர்பு கொண்டிருக்கிறோம். அந்த தொடர்பை பற்றிய பிரமிப்பு. நம் இயக்கம் முழுவதற்கும் அடிநாதமாக இருக்கும் ஒழுங்கை பற்றிய பிரமிப்பு. இந்தப் பிரமிப்புதான் அறிவியல் தொடங்கி இலக்கியம் வரை வெவ்வேறு வடிவங்களில் தோன்றி நம்மை ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பையும், பிரமிப்பையும் வாசிப்புதான் தக்க வைக்கிறது.

பல்வேறு தலைப்புகளில், பல ஆயிரக்கணக்கான புத்தகங்களும், பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்கள் என அள்ள அள்ளக் குறையாத அறிவு அமுதமாய், புத்தகக் கண்காட்சி ஒரு பொக்கிஷமாக காட்சியளிக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டிய ஒரு அறிவு திருவிழா. புத்தகங்கள் வாங்குவதற்கான செலவு என்பது இழப்பு அல்ல, வாழ்க்கையின் மூலதனம். வளமான நிலமே செழிப்பாகப் பயிர்கள் வளர உதவும். நலமான நூலகத் துறையே எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் வளரத் துணை செய்யும். நாம் உயிர் வாழ சுவாசிப்பது போலவே வாசிப்பதும் ஆகும்.

எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம் என்பது வாசகர்களிடமிருந்தே கிடைக்கிறது. எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் காலத்தால் அழியாதவையாகும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.