தற்போதைய செய்திகள்

108 ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய விரைவில் மேப் வசதி – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

108 ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய விரைவில் மேப் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சண்முகய்யா கேள்வி எழுப்பினார். ஓட்டப்பிடாரம் வட்டம் ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும், 108 அவசர கால ஊர்தி வழங்கவும் அரசு ஆவன செய்யுமா? என்றார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளித்து பேசியதாவது:-

உறுப்பினர் கூறிய ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு கட்டட வசதி செய்து தரப்படும். படுக்கை வசதி அதிகரிக்கப்படும். எக்ஸ்ரே உள்ளிட்ட கருவிகள் வழங்கப்படும். இவையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது என்று உறுப்பினர் கூறுகிறார்.

அது உண்மையல்ல. சர்வதேச தரத்தின்படி 8.2 நிமிடங்கள் சென்னையில் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. இது ஜப்பான் போன்ற நாடுகளில் 13 நிமிடமாக உள்ளது. சென்னையில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. 8.2 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும் நிலையில் 1 மணி நேரம் ஆகிறது என்று கூறுவது பொருத்தமானது அல்ல.

108 ஆம்புலன்ஸ் சேவை வேண்டி ஒரு நாளைக்கு 15 ஆயிரம் அழைப்புகள் வருகிறது. மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் அழைப்புகள் வருகின்றன. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மிக சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவையும், மற்ற இடங்களில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவையும், தேசிய நெடுஞ்சாலைகளில் 10 கிலோ மீ்ட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவையும், கிராமப்புறங்களில் 15 கிலோ மீ்ட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கப்படுகிறது. புதிதாக 200 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டு, ஒரு மருத்துவமனைக்கும், இன்னொரு மருத்துவமனைக்கும் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் மேப் வசதியை போல் 108 ஆம்புலன்ஸ் சேவையிலும் வழங்கப்பட இருக்கிறது. அதற்கான சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் வருகிறது, எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளித்தார்.