சிறப்பு செய்திகள்

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் – பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை

தமிழக சட்டப்பேரவையில்  காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தொடர்பான சட்ட மசோதாவை பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்து பேசியதாவது:-

நான் ஒரு விவசாயியாக இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வடிவை அவையில் தாக்கல் செய்வதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பு இறைவனாக காட்சி அளிக்கின்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்த பாக்கியமாக நான் எண்ணுகிறேன். 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன் என்று முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சர் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி நீண்ட நேரம் வரவேற்றனர். நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவேரி ஆற்றுப்படுகை மண்டலமானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. இது மாநிலத்தில் உணவு தானிய மற்றும் பிற வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதுடன் மாநிலத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. பல்வேறு வகைப்பட்ட வேளாண் நடவடிக்கைகளானது விவசாயிகளுக்கும், பண்ணை தொழிலாளர்களுக்கும் நாகரீகமான வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது.

சமீப ஆண்டுகளில் சில வேளாண்மை சாராத நடவடிக்கைகள் இம்மண்டலத்தில் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதுகாக்கும் பொருட்டு சில நடவடிக்கைகளை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக விவசாயிகளின் நலனுக்காக சேவை செய்வதற்கும், பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் பண்ணை நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உயர்மட்ட குழு ஒன்றினை இந்த சட்ட முன்வடிவு அமைக்க விழைகிறது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பனுக்கு தடை

எந்த ஒரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தவொரு புதிய திட்டத்தையோ, புதிய செயல்பாட்டையோ மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்கு ஆலை, இரும்பு தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்கு ஆலை, அலுமினியம் உருக்கு ஆலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்பு மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணை மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளடங்களான இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

எந்தெந்த பகுதிகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், மற்றும் கறம்பக்குடி வட்டாரங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் தலைமையில் 24 பேர் கொண்ட குழு

இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற பெயரில் ஒரு அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரை தலைவராகவும், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது.

அதேபோல் இந்த அதிகார அமைப்புக்கு உதவுவதற்காக மாவட்ட அளவில் ஒரு குழு இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

வேளாண் மேம்பாடு

வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு இருக்கிற வேளாண் நிலங்களை பயன்படுத்தவும், மற்றும் வேளாண் அற்ற பயன்பாடு அல்லது பிற வளர்ச்சி தேவையற்ற முறையில் வேளாண் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என இந்த சட்ட முன்வடிவு தெரிவித்துள்ளது. மேலும் பயிர் மற்றும் பண்ணைகளின் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் மேம்பட்ட சாகுபடி முறைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்தவும், வேளாண் துறையில் வெள்ளநீர் மேலாண்மை, பிற இடுபொருட்கள் உள்ளடங்கலான நீரின் உகந்த பயன்பாட்டின் வளர்ச்சிக்காவும் நிலையான வேளாண் மேம்பாட்டிற்காக வேளாண் சார்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்தவும், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன் மேம்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்காகவும் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு வேளாண்மை மண்டல சட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை செயல்படுத்துவதற்காக வருவாய் கோட்டாட்சியர் பதவிக்கு குறையாத எந்தவொரு அலுவலரும், இதுதொடர்பாக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட எவரும் அல்லது துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத காவல் அலுவலர் எவரும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் சட்டத்தின் வரைமுறைகளுக்கு முரணான சட்டத்தின் வகை முறைகளில் இணக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தை கொண்டிருந்தால் அவர் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து தேடலாம்.

மற்றும் அத்தகைய செயலுக்காக பயன்படுத்தியதாக கருதப்படும் எந்த ஒரு பொருள், இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவற்றையும் கைப்பற்றலாம். மற்றும் அத்தகைய கைப்பற்றுதல் தொடர்பான ஒரு அறிக்கையை நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அத்தகைய கைப்பற்றுகை செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அந்த பகுதியின் அதிகார வரம்பை கொண்டுள்ள மாவட்ட அளவிலான குழுவிற்கு அறிவிப்பு செய்யவேண்டும். இந்த சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து தேடுதல்களும் 1972 ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணங்கிய வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

கைப்பற்றுகை தொடர்பான அறிக்கை பெறப்பட்ட பின் மாவட்ட அளவிலான குழுவானது பொருத்தம் என கருதினால் கைப்பற்றுதல் செய்த பொருட்களை பறிமுதல் செய்ய ஆணையிடலாம்.

தண்டனை, அபராதம்

இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதமும், தொடர்ச்சியான அத்துமீறல் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.50 ஆயிரம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.மேற்கண்டவாறு சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், இரா.துரைக்கண்ணு ஆகியோர் முதலமைச்சரை பாராட்டி பேசினர். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் முதல்வரை பாராட்டி பேசினர்.

கருணாஸ், கடவுள் எனும் முதலாளி என்ற பாடலை பாடி முதலமைச்சரை வாழ்த்தினர். முன்னதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் விரிவான விளக்கம் அளித்த பின்பும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சட்ட மசோதாவை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாத நிலையில் வேறு சில காரணத்தை காட்டி தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.