தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளையொட்டி திருவாரூரில் 122 ஜோடிகளுக்கு திருமணம்

திருவாரூர்

புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் திருவாரூரில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் 122 ஜோடி மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் வழங்கினர்.

புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் 122 ஜோடி மணமக்களுக்கு நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கில் இந்த இலவச திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு திருவாரூர் மாவட்டக் கழக செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார். கழக அமைப்பு செயலாளர் கோ.கோபால், முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்பி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்று இலவச திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பட்டுவேட்டி, பட்டுசேலை காமாட்சி விளக்கு, குங்குமச்சிமிழ், பித்தளை குத்துவிளக்கு கட்டில், மெத்தை, பீரோ, பால் குக்கர், ரைஸ் குக்கர், இட்லி குக்கர், ஹாட்பாக்ஸ் மற்றும் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசைப் பொருட்கள் திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது. விழா அரங்கில் 122 ஜோடி மணமக்களும் ஒரே மேடையில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் 122 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட நிர்வாகிகள் பொன்வாசுகிராம், ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், திருவாரூர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எல்.எம்.முகமது அஷ்ரஃப் வரவேற்றார்.

இறுதியில் திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி நன்றி கூறினார். இந்த இலவச திருமணத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.