தற்போதைய செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு என்றால் முதல் குரலாக அ.தி.மு.க. குரல் ஒலிக்கும் – துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

திருவாரூர்

குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு என்றால் முதல் குரலாக அ.தி.மு.க. குரல் ஒலிக்கும் என்று கே.பி.முனுசாமி கூறினார்.

திருவாரூரில் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததற்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதாக கடிதம் அனுப்பி உள்ளது. இதனை சட்டமன்றத்திலும் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என சட்டமன்றத்தில் தெவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து போதுமான விளக்கத்தையும் முதலமைச்சர் கொடுத்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கு இந்த மசோதாவால் பாதிப்பு இருந்தால் முதல் குரலாக அதிமுகவின் குரல் இருக்கும். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக 2 கோடி மக்களின் கையெழுத்து பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.

நளினி உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் உச்சபட்ச அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். உலகத் தமிழர்களுக்கு எப்போதும் அதிமுக பாதுகாப்பாக இருக்கும். மறைந்த முதல்வர் கருணாநிதி போல் ஏமாற்று உண்ணாவிரதம் நடத்தி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்க மாட்டோம்.

இவ்வாறு கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.