தற்போதைய செய்திகள்

2021-ல் அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி – முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பேச்சு

சேலம்

2021-ல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கூறினார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றிய கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவாசல் குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளரும், தலைவாசல் ஒன்றிய குழு தலைவருமான ராமசாமி தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான இளங்கோவன் வரவேற்று பேசினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன், மாநில கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் கழகம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணம் புரட்சித்தலைவர் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மக்கள் போற்றும் மக்கள் தலைவராக மக்களின் முதல்வராக முதல்வர் விளங்கி வருகிறார்.

பொய்யை திரும்ப திரும்ப சொல்லி தமிழக மக்களை திசை திருப்ப முயற்சித்து வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இஸ்லாமிய மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார். இஸ்லாமிய மக்கள் தமிழகத்தில் எங்கும் பாதிக்கப் படவில்லை. குடியுரிமை பாதுகாப்பு திருத்த சட்டம் வைத்து அரசியலாக்க பார்க்கிறார் ஸ்டாலின். அது தமிழக மக்களிடம் எடுபடவில்லை. 2021-ல் கழகம் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. இதனை திமுகவினரை ஒத்துக் கொள்கின்றனர். கழக அரசு மக்கள் சக்தியாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறை அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் இதைப் பாராட்டி வருகின்றனர். வேளாண் மண்டலம் அமைத்ததன் மூலம் விவசாயிகளின் பாதுகாவலராக மக்களின் காவலனாக அம்மாவின் செல்லப் பிள்ளையாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விளங்குகிறார். வரும் அனைத்து தேர்தலிலும் கழகத்தின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் பேசினார்.

கூட்டத்தில் மாநில அமைப்பு சாரா நல வாரிய செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திரலேகா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர்கள் பெரியதம்பி, பாலகிருஷ்ணன், துரை அரசு, கரும்பாயிரம், அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைவாசல் ஒன்றிய துணை செயலாளர் வக்கீல் வேல்முருகன் நன்றி கூறினார். கூட்டத்தில் தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.