தற்போதைய செய்திகள்

குடும்ப கட்சியான தி.மு.க.வில் இளைஞர்கள் சேரமாட்டார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி…

மதுரை:-

திமுக குடும்ப கட்சி ஆகிவிட்டதால் இளைஞர்கள் யாரும் சேர மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் கூறினார்.

மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு தொகுதியில் உள்ள ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் 6 வது தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது இந்த 90 வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக்சாலை, அமைக்க பணி தொடங்கப்பட்டுள்ளது ஏற்கனவே இங்கு ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை ரூ.1 கோடி மதிப்பில் பல்வேறு திட்டபணிகள் நடைபெற்றுள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சாலைவசதி, பாதாளசாக்கடை திட்டம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது இதன் மூலம் மதுரை மாநகராட்சி பகுதி மிளிரும் பகுதியாக உருவாகும்.

அதே போல் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதுரையில் உள்ள வண்டியூர் கண்மாய், மாடக்குளம் கண்மாய், நிலையூர் கண்மாய் ஆகியவை தூர்வாரப்பட்டுள்ளது இதன் மூலம் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் முழுமையாக கண்மாய்களில் சேதாரமின்றி சேர்வதால் மதுரையின் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி திமுகவில் 30 லட்சம் இளைஞர்களை இணைப்போம் அதில் மதுரையில் 2 லட்சம் இளைஞர்களை இணைப்போம் என்று கூறி மதுரை வந்துள்ளார். திமுகவில் கருணாநிதி முதல் தற்போது வரை வாரிசு அரசியல் உருவாகியுள்ளது. திராவிட இயக்கத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா படத்தைக்கூட திமுகவில் போடவில்லை.

அதே போல் கருணாநிதி படமும் விரைவில் போடமாட்டார்கள் ஏனென்றால் அங்கு வாரிசு அரசியல் உருவெடுத்துள்ளது. ஆனால் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வாரிசு அரசியலை உருவாக்கியது கிடையாது. தற்போது அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட சாமானிய தொண்டர்களாகிய முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும், தான் இன்றைக்கு கழகத்தை வழிநடத்தி வருகின்றனர்.

ஆகவே திமுகவில் இளைஞர்கள் யாரும் சேரமாட்டார்கள் வேண்டுமென்றால் அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அவர்களை வேண்டுமானால் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு மதுரை மாநகர் இளைஞரணி சார்பாக 10000 இளைஞர்களும், மதுரை மாநகர் பாசறை சார்பில் 10000 இளைஞர்களும், இளம் பெண்களும் கழகத்தில் இணைந்துள்ளனர்

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற திட்டம் 2013ம் ஆண்டு அப்போது இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது அதில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரதமர் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் அறிவித்துள்ளார், நிச்சயம் இந்த திட்டத்தினால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ரேசன்கடைகளில் சீனி வழங்கப்படுகிறது அதே போல் துவரம்பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இது கிடையாது. ஆகவே இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்படும். ஆனால் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர பொறியாளர் அரசு, மாவட்ட கழக துணைச்செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, முன்னாள் துணைமேயர் கு.திரவியம், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் சோலைராஜா, மாவட்ட பாசறை செயலாளர் அரவிந்தன், பகுதி கழக செயலாளர் கருப்பசாமி, மாவட்ட தகவல்தொழில்நுட்பபிரிவு செயலாளர் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்