தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரூ.23 லட்சத்தில் ரத்த சுத்திகரிப்பு மையம் – அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்…

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரூ.23 லட்சம் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு மையத்தை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகிக்க, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆடலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரத்த சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது.அந்தவகையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள மக்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர் செல்லும் சூழ்நிலையில் தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலேயே ரூ.23 லட்சம் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு மையமானது (டயாலிசிஸ் மையம்) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இரத்த சுத்திகரிப்பு மையத்தில் 3 ரத்த சுத்திகரிப்பு கருவிகள் மூலம் ஒரு நாளைக்கு 9 சாதாரண மக்களுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்வதற்கான வாய்ப்புகளை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு உருவாக்கி தந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.இளங்கோ மகேஸ்வரன், குடும்ப நலம் துணை இயக்குநர் மரு.உமா, வருவாய் கோட்டாட்சியர் புன்னியகோட்டி, மருத்துவர் சிவக்குமார், திருத்துறைப்பூண்டி நகர வங்கி தலைவர் டி.ஜி.சண்முகசுந்தர், வட்டாட்சியர் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.