தற்போதைய செய்திகள்

மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.1.16 கோடியில் புதிய கட்டடங்கள் – அமைச்சர்கள் ஜி.பாஸ்கரன், வி.எம்.ராஜலட்சுமி ஆய்வு…

திருநெல்வேலி:-

கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் தமிழ்நாடு கதர் வாரிய தலைமைச் செயல் அலுவலர் சி.நடராஜன் முன்னிலையில் நேற்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் தேன்பொத்தையில் செயல்பட்டு வரும் தேன்பொத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினையும், இலஞ்சி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் இலஞ்சி மண்பாண்ட தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சங்க கட்டடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் ஜி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் 11.04.1947 அன்று தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கம் பதிவு செய்யப்பட்டு 15.04.1947 அன்று செயல்பட துவங்கியது இச்சங்கத்தில் 80 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் சங்க கட்டடம் கட்டப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு இயற்கை இடர்பாடுகளை சமாளித்து இருந்த சங்க தொழிற்கூடம் சிதிலமடைந்து உறுப்பினர்களிடம் தொழிற்கூடத்திலிருந்து உற்பத்தி பணியினை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து சங்க உறுப்பினர்களது கோரிக்கையை ஏற்று 2017-2018-ம் ஆண்டு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.66 லட்சம் மதிப்பில் தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தொழிற் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்திற்கு புதிய தொழிற்கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் உற்பத்தியை தொடங்கிடும் பொருட்டு விரைவில் சங்கத்திற்கு ஒப்படைக்கபடுகிறது. இத்தொழிற் கூடங்கள் கட்டித் தருவதன் மூலம் பணிகூடங்களாக பயன்படுத்துதல், மூலபொருட்களை சேமித்து வைத்தல், தயாரித்த பொருட்களை உலர வைத்தல், முடிவுற்ற பொருட்களை விற்க்கும் வரை பாதுகாப்பாக சேமித்து வைத்தல் போன்ற பல நோக்கங்களுக்கு தொழிற்கூடங்களை பயன்படுத்தி கொள்வதன் மூலம் மண்பாண்டத் தொழிலாளர்களின் உற்பத்தியும், உற்பத்தி திறனும் அதிகரித்து அவர்களது பொருளாதார நிலையும் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.

இவ்வாறு அமைச்சர் ஜி.பாஸ்கரன் கூறினார்.

அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கூறுகையில், கலைநயமும் பாரம்பரியமும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய மிகுந்த மதிநுட்பமும் வாய்ந்த மண்பான்ட தொழில்களை ஊக்கவிக்கும் பொருட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு செய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டத்திற்குட்பட்ட இலஞ்சி மற்றும் தேன்பொத்தை பகுதிகளில் மண்பான்ட தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தவும் இருப்பு வைக்கவும், பாதுகாக்கவும் புதிய கட்டடங்களை கட்டி வருகிறது. இக்கட்டுமான பணிகள் நிறைவானது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும் இந்த கட்டடங்களை மண்பாண்ட தொழிலாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு இப்பாரம்பரிய தொழிலை கற்றதர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சண்முகசுந்தரம், மண்டல துணை இயக்குநர் அருணாசலம், திருநெல்வேலி பனைவெல்லம் மேலாண்மை இயக்குநர் மு.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.