சிறப்பு செய்திகள்

தமிழர்கள் உரிமையை காப்பதில் எப்போதும் ‘அம்மாவின் அரசு’ உறுதியுடன் செயல்படும் – பேரவையில் முதலமைச்சர் பேச்சு

சென்னை

அரசியலுக்காக உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றை பேசுபவர்கள் நாங்கள் அல்ல. தமிழர்களின் உரிமைகளை காப்பதில் எப்போதும் அம்மாவின் அரசு உறுதியுடன் செயல்படும் என்று பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

அரசியலுக்காக உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றை பேசுவர்கள் நாங்கள் அல்ல என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்றுமுன்தினம் சட்டப்பேரவையில் “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” குறித்த சட்டமுன்வடிவை முன்வைத்து ஆற்றிய உரை வருமாறு:-

“விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்பதை நான் ஏற்கனவே பலமுறை எடுத்துரைத்துள்ளேன். இரவு பகல் பாராமல், வெயில், மழை பொருட்படுத்தாமல் ரத்தத்தை வியர்வையாக மண்ணில் சிந்தி உழைக்கின்ற விவசாய பெருங்குடி மக்களுக்கு எங்களுடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. நானும் ஒரு விவசாயி என்பதால், வேளாண் பெருமக்களின் பிரச்சனைகளையும், அவர்களின் தேவைகளையும் உணர்ந்து நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, அம்மாவை தொடர்ந்து, அம்மாவின் அரசும் வேளாண் துறையில் பல்வேறு முத்திரைகளை பதித்து வருகிறது.

சுமார் 28 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யும் காவேரி டெல்டா பகுதியானது, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குகிறது.

• இப்பகுதி விவசாயிகள் வெள்ளம், வறட்சி மற்றும் புயல் போன்ற இயற்கை சவால்களை அடிக்கடி எதிர்கொண்டாலும், விவசாய உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

• காவேரி டெல்டா பகுதி ஆழ்துளை மூலமும் கிணறு மூலமும் பாசனம் செய்யும் விவசாயப் பகுதியாக உள்ளதால், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுவதோடு அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

• விவசாய உற்பத்திக்கு முக்கிய பகுதியாக உள்ள காவேரி டெல்டா பகுதி, கடல் சார்ந்த பகுதியாக உள்ளதால் நிலத்தடி நீர் வெளியேற்றப்பட்டால் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

• காவேரி டெல்டா பகுதி சதுப்பு நிலக் காடுகள் அமைந்துள்ள பகுதியாகும். இவ்வகை திட்டங்களால் சுனாமி போன்ற பேரழிவுகளுக்கு அரணாக விளங்குகின்ற சதுப்பு நிலக் காடுகள் பாதிக்கப்படும்.

• காவேரி டெல்டா பகுதியானது, தொல்லியல் மற்றும் கலாச்சார பாரம்பரியமிக்க மண்டலமாகும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் சேதம் அடையும் ஆபத்து உள்ளது.இதனால், இப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்துள்ள பாரம்பரியம் மிக்க காவேரி டெல்டா பகுதியினை மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாத்திடவும், வேளாண் தொழிலுக்கு எவ்வித இடையூறும் எப்போதும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பினை 9.2.2020 அன்று தலைவாசலில் நடந்த கால்நடைப் பூங்கா நிகழ்ச்சியில் “தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிபடுத்திடவும், காவேரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

அத்தோடு நில்லாமல் 10.2.2020 அன்றே, அதாவது அறிவிப்பின் மறுநாளே இவ்வறிவிப்பு தொடர்பாக இயற்றப்படும் சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டி மத்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதினேன். மேலும் அதனை மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழு நேரடியாக புதுதில்லி சென்று அதனை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சில எதிர்க்கட்சியினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்த முடியாது, இது நடக்காது என பல கருத்துக்களை, ஊடகங்களில் வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சித்தனர். அவர்களின் எண்ணம் மக்களிடம் ஈடேறவில்லை. அதற்கு மாறாக, அனைத்து விவசாய சங்கங்களும், வேளாண் பெருமக்களும் இந்த அறிவிப்பினை வரவேற்று பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 10.2.2020 தேதியிட்ட கடிதத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் மாநில அரசுக்கு 19.2.2020 தேதியிட்ட பதில் கடிதம் எழுதியுள்ளார். வேளாண் பெருமக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் அம்மாவின் அரசு, வேளாண் பெருமக்களின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டு மிக குறுகிய காலத்திலேயே சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து, தகுந்த வழிமுறைகளை ஆராய்ந்து, இன்று, “பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனிச் சட்டத்தினை” சட்ட சபையில் அறிமுகம் செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புரட்சித்தலைவி அம்மாவின் அரசு எடுத்த சில முக்கிய நடவடிக்கைகளை இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.

• 2016-2017-ல் நிலவிய வறட்சியின் பிடியில் இருந்து விவசாயிகளைக் காக்க, நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வறட்சி நிவாரணமாக 2,247 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

• 2011-ம் ஆண்டு முதல் இது வரை சுமார் 90 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில், 48 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

• பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலேயே ஒரு வரலாற்றுச் சாதனையாக விவசாயிகளுக்கு 7,618 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக பெற்றுத் தந்த அரசு எங்களுடைய அரசு.

• மானாவாரி சாகுபடி மூலம் அதிக லாபம் ஈட்டும் வகையில் நீடித்த, நிலையான மானாவாரி இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் 25 லட்சம் ஏக்கர் பரப்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 9 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

• முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் அவர்தம் குழந்தைகளின் பல்வேறு நிவாரணங்களுக்காக இதுவரை 1,868 கோடி ரூபாய் அம்மாவின் அரசு வழங்கியுள்ளது.

• அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதலால் மக்காச்சோளப் பயிர்கள் பாதிக்கப்பட்ட போது, அவ்விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களது இழப்பினை ஈடு செய்ய 186.25 கோடி ரூபாய் அந்த விவசாயிகளுக்கு அம்மாவுடைய அரசு நிவாரணமாக வழங்கியது.

• இவ்வாண்டு படைப்புழு பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த, 47 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசே பூச்சி மருந்தை தெளிக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்றிய அரசு அம்மாவின் அரசு.

• தென்னை விவசாயிகள் அதிக லாபம் ஈட்டும் வகையில் தென்னம்பாளையிலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்வதற்கு உரிய சட்ட திருத்தத்தை அம்மாவின் அரசு மேற்கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு.

• பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளின் அறுவடைக்குப்பின் இழப்பினைக் குறைக்க, 585 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

• அதேபோல, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 217 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப் பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

• கடந்த 3 ஆண்டுகளில், 3.3 லட்சம் எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டம் சுமார் 1,480 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

• வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் பெற 1,665 இயந்திர வாடகை மையங்கள் கிராம மற்றும் வட்டார அளவில் 234 கோடி ரூபாய் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

• இது வரை 6 லட்சம் சிறு குறு விவசாயிகளை 200 கோடி ரூபாய் செலவில், கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்து 6 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

• டெல்டா பகுதிகளில் பருவ மழை பொய்த்த 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய சிறப்பு குறுவை தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தியது. ஏரிகளை தூர்வாரி பராமரித்து நீரின் கொள்ளளவை உயர்த்தியும், காவேரியில் கடைமடை வரை வாய்க்கால்களை தூர் வாரி, நீர் கொண்டு சென்ற காரணத்தாலும், இந்த ஆண்டில் 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக தமிழ்நாட்டில் வேளாண் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்ட விவசாயிகள் நீராதாரம் பெறுவதற்கு பொன்னியின் செல்வி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும் நடத்திய சட்டப் போராட்டத்தின் காரணமாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டு, காவேரியில் உள்ள தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டது. இவை அனைத்தையும் செய்தது அம்மா அவர்களின் அரசு தான் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவேரியில் நமக்குள்ள உரிமையை நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட காவேரி நடுவர் மன்றம், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று வழங்கியது. அம்மா அவர்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் காரணமாக காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டதும் அம்மாவின் அரசால் தான்.

அம்மாவின் அரசு, பரம்பிக்குளம், முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சினைகளில் தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், பிற நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. அதற்கு உதாரணமாக, மேற்கண்ட நதிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக, கேரள முதலமைச்சரை நானே நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினேன். இந்த முயற்சியால் பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை தற்பொழுதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பல திட்டங்களையும் இன்னும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளையும் எடுத்த காரணத்தால், வேளாண் பெருமக்களின் வருமானம் வெகுவாக உயர்ந்து, கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் உரிமைகளை காப்பதில் அம்மாவின் அரசு எப்போதும் உறுதியுடன் செயல்படும்.என்னையும், இந்த அரசையும் பொறுத்தவரை, பிறரைப் போல அரசியலுக்காக உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு, வெளியில் ஒன்றைப் பேசுபவர்கள் அல்ல நாங்கள். விவசாயிகளின் பிரச்சனைகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை ஆராய்ந்து, முறையான நடவடிக்கைகள் மூலம் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு வருகிறோம்.

உதாரணத்திற்கு இந்த பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான அறிவிப்பினை கடந்த 9-ந்தேதி நான் வெளியிட்டேன். அதற்குப் பிறகு, பத்தே நாட்களில் பல சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து, அதற்கான சட்டத்தினைக் கொண்டு வந்து இந்த அவையில் அறிமுகப்படுத்தி உள்ளோம். இவ்வாறான எங்களது நடவடிக்கைகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். எனவே, எப்போதும் மக்கள் எங்களுடனே இருப்பார்கள்.

வேளாண் பெருமக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த சட்டம் வரலாற்று சிறப்புமிக்க சட்டம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்ற போது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றார்கள். 10-ந் தேதி கடிதத்திற்கு மத்திய அமைச்சர் என்ன தகவலை தெரிவித்தார் என்று கேட்டார். அதை நான் என்னுடைய பதிலிலே தெரிவித்திருக்கிறேன்.

அதேபோல பழைய திட்டங்கள் தொடருமா என்று கேட்டு இருக்கிறார்கள். அந்த திட்டங்கள் தொடர்வது பற்றி இங்கே கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். நாங்கள் சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசிக்கின்ற போது, பழைய திட்டங்களை தடை செய்தால் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்ற கருத்தை தெரிவித்த காரணத்தினாலே, முதலில் இச்சட்டமுன்வடிவை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்திருக்கிறோம். அதேபோல அதிகார அமைப்பு குறித்து சொல்லி இருக்கின்றீர்கள்.

அந்த அதிகார அமைப்பை பொறுத்தவரையில், ஒரு வருடம் எம்.எல்.ஏ., எம்.பி., அவற்றில் இடம் பெறுவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். அப்பகுதியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஓர் ஆண்டு காலத்திற்கு அல்லது அவரது பதவிகாலம் முடியும் வரையோ இதற்கு எது முந்தையதோ, அதுவரையில் பதவியில் இருப்பார். அதற்காகத் தான் ஒரு வருடம் என்று குறிப்பிட்டு இருக்கின்றோம். அவர்கள் அந்த பதவியில் உறுப்பினர்களாக இடம் பெற்றவுடன் தேவைப்படின் நீட்டித்து கொடுக்கலாம் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல இந்த டெல்டா மாவட்டங்களில் திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்கள் விடுபட்டதாக இங்கே தெரிவித்தார்கள். திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளாக இருக்கின்றன. ஆகையால் அவற்றை எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்பகுதிகள் எல்லாம் பாதிப்பிற்கு உள்ளாக வில்லை. ஆகவே தான், இந்த திட்டத்திலே எடுத்துக் கொள்ள முடியவில்லை என்பதையும், இந்த சட்டமுன்வடிவில் கொண்டுவர வில்லை என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

டெல்டா மாவட்டங்களிலே தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் தான் முழுமையாக இருக்கின்ற டெல்டா மாவட்டங்கள். கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி, அந்தப் பகுதிகளை நாங்கள் குறிப்பிட்டு இருக்கின்றோம். இந்த மூன்று மாவட்டங்கள் முழுமையாக டெல்டா பகுதிகளாக இருக்கின்ற காரணத்தினால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயப் பிரதிநிதிகளை இந்த அதிகார அமைப்பில் உறுப்பினர்களாக இடம்பெற செய்வோம்.

அதேபோல, ரியல் எஸ்டேட் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களை தேவைப்படின் விற்பனை செய்ய ஏதுவாக தான் இச்சரத்து இச்சட்டமுன்வடிவில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால், இரவு பகல் பாராமல் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைப்பவர்கள் விவசாயிகள். ஆகவே, அப்படிப்பட்ட விவசாயிகளுடைய நிலத்தை விற்க முடியாது என்று நாம் சட்டத்திலே கொண்டு வந்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்ற அடிப்படையிலே அதை தவிர்த்திருக்கின்றோம் என்பதை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகின்றேன்.

அதேபோல, இந்த அமைப்பு அதிகாரம் படைத்த அமைப்பு, இதனை வேளாண் மண்டலமாக அறிவித்ததே, வேளாண் துறையின் மூலமாக கொண்டு வரப்பட்ட சட்டம். அதனால் இந்த சட்டத்திற்கு முழுமையான அதிகாரம் இருக்கின்றது என்ற அடிப்படையிலே தான் வேளாண் துறையின் மூலமாக இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டம், பாதுகாப்பான சட்டம், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.