சிறப்பு செய்திகள்

அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் துபாய் புறப்பட்டு சென்றார்…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 28-ந்தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உள்பட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவரது முன்னிலையில் கையெழுத்தானது.

அதன் பிறகு அங்கிருந்து கடந்த 1-ந்தேதி முதலமைச்சர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு மிகப்பெரிய மாட்டு பண்ணையை பார்வையிட்டார். சேலத்தில் அமைய இருக்கும் கால்நடை பூங்காவை அதேபோல் அமைப்பதற்காக ஆலோசனை நடத்தினார். பின்னர் நியூயார்க் நகரில் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது 35-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நியூயார்க்கில் இருந்து சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அங்கு பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்தபோது அவர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்ெகாண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பின்னர் டெஸ்லா நிறுவனத்துக்கு சென்றபோது மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனத்தை பார்வையிட்டார்.

ப்ளூம் எனர்ஜி நிறுவனத்துக்கும் சென்று எரிசக்தியை ஏற்கனவே உள்ள மின் கட்டமைப்பின் எளிய முறையில் சேர்ப்பதை கண்டறிந்தார். இந்த தொழில் நுட்பங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசித்தார். ப்ளூம் எனர்ஜி நிறுவனம் திட ஆக்சைடு எரிபொருள் செல்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.

நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைந்தபொழுது விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ், அனாஹெய்ம் நகரிலுள்ள கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டார். அந்நிறுவனத்தினர் முதலமைச்சரிடம் கழிவுநீரை மறு சுழற்சி மூலம் சுத்தமாக்கி மீண்டும் அதனை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.

இந்நிகழ்வின்போது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் முனைவர் எஸ்.விஜயகுமார், முதலமைச்சரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணம்  முடிவுற்று மாலை 4.40 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார். இ்ன்று துபாயில் பல்வேறு இடங்களுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இரண்டு நாட்கள் துபாயில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 10-ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு 6 மணி அளவில் சென்னை வந்தடைகிறார்.