தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது -முதமைச்சர் கடும் தாக்கு

கோவை

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எங்களுடைய கூட்டணிக் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து இந்த உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.

நான் ஏற்கனவே பலமுறை சொன்னது உண்மையாகி உள்ளது. யாரால் இந்த உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்தி விட்டார். ஒவ்வொரு முறையும் விரைவாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் அவர்கள் வாதித்துக் கொண்டிருந்தார்கள். 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்திற்குச் சென்றதனால் தான் உள்ளாட்சி தேர்தல் தடைபட்டது. அப்பொழுது வார்டு வரையறை சரியில்லை, இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்றவில்லை என்று கூறினார்கள். அதனடிப்படையில் முறையாக வார்டு வரையறை செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதமே வார்டு வரையறை செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது. அதில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் கருத்து தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 7 மண்டலமாக பிரிக்கப்பட்டு 7 மண்டலத்திலும் ஆட்சேபனை மனுக்களைப் பெற்றிருக்கிறார்கள். சுமார் 19 ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடத்திலும், பல்வேறு கட்சிகளிடத்திலும் பெறப்பட்டு, அதனடிப்படையில் அவர்கள் பரிசீலனை செய்து, முறையாக இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டு வரையறை செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எந்த வார்டில் குறை இருக்கிறது, எந்த வார்டில் இட ஒதுக்கீட்டில் பிரச்சனை என்று குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக இந்தத் தேர்தலை எப்படியாவது தள்ளிப்போட வேண்டுமென்று திரு.ஸ்டாலின் அவர்கள் ஒட்டுமொத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் பேசுகின்றபொழுது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தேர்தலை வேண்டுமென்றே தள்ளிப் போட்டுக் கொண்டு போகிறது, காலம் தாழ்த்துகிறது, இதனால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மை கிடைக்காமல் போகிறது, உள்ளாட்சி அமைப்புகள்தான் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்கின்ற அமைப்பு, அந்த அமைப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு முறையாக தேர்தலை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து வந்தார். தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.

27 மாவட்டங்களிலும் நீங்கள் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது எல்லா ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் இப்பொழுது தேர்தலை அறிவித்திருக்கிறது. ஆனால் ஸ்டாலின் 2017-ல் தேர்தலை நிறுத்துவதற்கு எப்படி நீதிமன்றத்தை நாடி, தேர்தலைத் தள்ளிப்போட முயற்சி செய்து அதன் விளைவாக மூன்று ஆண்டுகள் தேர்தலை நடத்த முடியாத ஒரு சூழ்நிலை இருந்து வந்ததோ அதேபோல இப்பொழுதும் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லி இந்தத் தேர்தலை எப்படியாவது தள்ளிப்போட வேண்டும் என்று முயற்சிக்கிறார். திமுக தேர்தலை சந்திக்கத் தயங்குகிறது, அஞ்சுகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். உச்சநீதிமன்றம் அவருடைய கருத்துக்களை எல்லாம் கேட்டுத்தான், 27 மாவட்டங்களில் நீங்கள் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீதமுள்ள 9 மாவட்டங்களிலும் முறையாக வார்டு வரையறை செய்து, அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலை நான்கு மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஸ்டாலின் வரவேற்று விட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார். அது தான் வேடிக்கையாக இருக்கிறது. அவருடைய குறிக்கோள், திட்டமெல்லாம், எப்படியாவது இந்தத் தேர்தலைத் தள்ளிப்போட வேண்டும் என்பதுதான். ஸ்டாலின் மக்களைச் சந்திக்க அஞ்சுகிறார், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது.

குறிப்பாக, ஸ்டாலின் அஞ்சுகிறார். ஒவ்வொரு முறையும் ஊடகங்களைச் சந்திக்கும் பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தலை சந்திப்பதற்கு தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்புவார். அதே கேள்வியை இன்று நாங்கள் எழுப்புகிறோம். உச்சநீதிமன்றம் தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு ஏன் பயப்படுகிறீர்கள்? மக்கள் வாக்களித்துத் தானே பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஆகவே, ஸ்டாலின் மக்களைச் சந்திக்க பயப்படுகிறார். திராவிட முன்னேற்ற கழகமும் அஞ்சுகிறது.

கேள்வி:- தமிழகத்தில் கஜானா காலி என்று ஸ்டாலின் கூறுகிறாரே?

பதில்:- இப்பொழுது தானா இவ்வாறு கூறுகிறார்? மூன்றாண்டுகளாக இதுபோலத்தான் கூறிக் கொண்டிருக்கிறார். நாங்கள் எத்தனை திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்? குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் எவ்வளவு பாலம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? எவ்வளவு சாலைகளை நாங்கள் சீரமைத்துக் கொண்டிருக்கிறோம்? எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்? அத்திக்கடவு-அவினாசித் திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை மக்களிடத்திலே பரப்பி, விஷமத்தனமான செய்தியை பரப்பி, மக்களை குழப்பி, அதில் அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார், அது ஒரு போதும் நடக்காது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்த வரைக்கும் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியிலே, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியிலே சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.