சிறப்பு செய்திகள்

மாநில நகர்ப்புற வீட்டுவசதி- வாழ்விட மேம்பாட்டு கொள்கையை வகுக்க அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் தகவல்

சென்னை

மாநில நகர்ப்புற வீட்டுவசதி, வாழ்விட மேம்பாட்டு கொள்கையை வகுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில்  நடைபெற்ற கிரடாய் FAIRPRO 2020 துவக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- 

கிரடாய் அமைப்பின் FAIRPRO 2020 என்ற இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வருடந்தோறும் நடத்தப்படும், இத்தகைய நிகழ்ச்சிகளின் வாயிலாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் நடுத்தர வர்க்கத்து மக்கள் தங்கள் கனவு இல்லங்களை அமைத்துக்கொள்ள, இந்த கண்காட்சி பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன். வீட்டுவசதித் திட்டங்களை செயல்படுத்துபவர்கள், கடனுதவி வழங்கும் வங்கிகள், மற்றும் பயனாளிகள் ஆகிய முத்தரப்பினரும் ஒரே அரங்கில் இந்த கண்காட்சியில், பங்குபெற்று செயல்படுவது சிறப்பானதாகும்.

மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த வீட்டுவசதி கண்காட்சியில் 67 கட்டட மேம்பாட்டாளர்கள் தங்களுடைய 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்களை மக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர், என்றும், இத்திட்டங்களில் ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை விலை உள்ள வீடுகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அறிந்தேன். நடுத்தர மக்கள் வீடுகள் வாங்குவதற்கு, ஒரு எளிதான சிறந்த வழியினை ஏற்படுத்தியுள்ளதற்காக கிரடாய் அமைப்பினர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சியில் தற்போது இயங்கி வரும் கிரடாய் அமைப்பு, சேலம், ஈரோடு மற்றும் திருநெல்வேலியில் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம். அந்த அடிப்படை தேவைகளில் அத்தியவசியத் தேவையான இருப்பிட வசதியினை ஏழை எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் எளிதில் பெறும் வண்ணம் அம்மா அவர்களது அரசு, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் அம்மா அவர்களது கனவாகும். அதை நனவாக்கும் வகையில் தமிழக அரசு, தொடர்ந்து பல திட்டங்களைத் தீட்டி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது. 2020-21-ம் ஆண்டில் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1,12,876 தனி வீடுகளும், 65,290 அடுக்கு மாடி குடியிருப்புகளும் கட்டப்படும் என்று என்னால் கடந்த 14-2-2020 அன்று அளிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளேன். அம்மா அவர்களது அரசு “அனைவருக்கும் வீடு” என்ற தொலைநோக்கு பார்வையை எட்டிட, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவற்றில் முக்கியமானவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

நகர் பகுதிகளில் நிலவி வரும் அதிகப்படியான நிலத்தின் மதிப்பை கருத்தில் கொண்டு, நடுத்தர மற்றும் நலிந்த வருவாய் பிரிவினர் நகரப் பகுதிகளில் வீடுகள் வாங்கி பயன்பெறும் நோக்கத்துடன், அம்மா அவர்களது அரசு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தளப்பரப்பு குறியீடான 1.5-லிருந்து 0.5 கூடுதலாக உயர்த்தி, 2.0 ஆக மாற்றி அமைத்துள்ளதை கட்டுமான துறையினர் அனைவரும் வரவேற்றுள்ளனர். அதுமட்டுமல்ல, உயரமான கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு 2.50-லிருந்து 3.25-க்கு அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அதே பரப்பளவு உள்ள மனையில், முன்பைவிட அதிக அளவில் குடியிருப்புகள் கட்ட இயலும், இதனால் குடியிருப்புகளின் விலை கணிசமாகக் குறையும். மேலும், பணம் செலுத்தி, பெறக்கூடிய கூடுதல் தளப்பரப்பு குறியீடும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெவ்வேறு துறைகளில் நடைமுறையில் இருந்த கட்டட விதிகளை ஆராய்ந்து, ஒருங்கிணைக்கப்பட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் வகையில், பொதுமக்கள் மற்றும் பயனாளிகளின் கருத்துக்களை கேட்டறிந்து உருவாக்கப்பட்ட “தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டட விதிகள் 2019”, கடந்த 04.02.2019 முதல் அம்மா அவர்களது அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய விதிமுறைகள், மலைப்பகுதிகள், நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியதாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் உள்ளன.

இதன் மூலம் குறைந்த அகலம் கொண்ட சாலைகளையொட்டிய மனைகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிக தளங்களுடன் கூடிய கூடுதல் குடியிருப்புகளை கட்டிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில், வீடுகளின் விலை கணிசமாக குறைவதற்கான சூழல் உருவாக்கப் பட்டுள்ளது.

பொதுமக்கள் திட்ட அனுமதி விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கவும் மற்றும் விரைந்து பரிசீலனை செய்யவும் ஏதுவாக, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்ட அனுமதி விண்ணப்பத்தின் பல்வேறு நிலைகளிலான கூர்ந்தாய்வு பற்றிய தகவல்கள் மின் அஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்கள், வழியாக அனுப்பப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் திட்ட அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வின் மூலமாக திட்ட அனுமதி வழங்கும் முறை நவம்பர் 2019‑ல் துரிதமாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதற்கான சான்றிதழ் இன்றி, பணி நிறைவு சான்றிதழ் வழங்கும் முறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு, வாங்கத்தக்க விலையில் வீட்டுவசதி திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக, நாட்டின் முதலாவது முதலீட்டு நிதியாக, தமிழ்நாடு மாநில அரசு உறைவிட நிதி ஏற்படுத்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசிதழில் மாநில உறைவிட நிதி விதிகள் 2020, வெளியிடப்பட்டு, உறைவிட நிதி வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் பொது சொத்துக்களை உருவாக்கவும் குறிப்பாக நகர்ப்புறங்களில் புதிய சாலைகள், வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், நிலம் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. பொதுமக்கள் உபயோகத்திற்காக தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் காலதாமதத்தை தவிர்க்கவும், வளர்ச்சி உரிமை மாற்றம் ஒரு சிறந்த கருவியாக செயல்படுகிறது.

நாட்டின் பல நகரங்களில், விரைவாக நிலம் கையகப்படுத்த, வளர்ச்சி உரிமை மாற்றம் வழிவகை செய்கிறது. இந்த வளர்ச்சி உரிமை மாற்றத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க ஏதுவாக, தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971‑ல் உரிய திருத்தத்தினை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 24.12.2019 அன்று அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு வளர்ச்சி உரிமை மாற்று விதிகள் 2019, நில உரிமையாளர்களுக்கு வளர்ச்சி உரிமையினை மாற்றம் செய்வதன் மூலம், அவர்களிடமிருந்து நிலம் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.

அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், வீடுகள் வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி வழங்குவதற்கும், நிதி மேலாண்மை மற்றும் வீட்டுவசதி வழங்குவதில் நிலைத்த தன்மை இருப்பதற்கும், தொலைநோக்கு திட்டம் 2023, வழிவகை செய்கிறது. மாநில நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுக் கொள்கையை வகுப்பதற்கான விரைவான நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை ஈடுசெய்யவும், தற்போது நடைமுறையில் இருக்கும், நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு மாற்றாக, “நில சேர்ம பகுதி வளர்ச்சித் திட்டம்” செயல்பட ஏதுவாக, தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971‑ல் உரிய திருத்தத்தினை, ஜூலை 2018 அன்று தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ் உரிய விதிகள் உருவாக்கப்பட்டு அரசால் தற்போது இறுதி செய்யப்படும் தருவாயில் உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மலையிடப் பாதுகாப்புக் குழுமப் பகுதிகளில், திட்ட அனுமதியினை விரைவாக வழங்கும் வகையில், ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அம்மா அவர்களது அரசின் இத்தகையான ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு, ஒத்துழைப்பு நல்கும் வண்ணம், கிரடாய் அமைப்பு சிறப்புடன் செயலாற்றி வருவதோடு, ஏழை, நடுத்தர மக்கள் வீட்டு வசதி பெறுவதற்கான பல்வேறு பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது.

நியாயமான குறைந்த விலை, தரமான கட்டுமானம், வீடு கட்டுபவரின் மீது நம்பகத்தன்மை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வீடுகளை ஒப்படைத்தல், அடிப்படைவசதிகள் ஆகியவற்றையே வீடு வாங்குபவர்கள் தற்போது பெரும்பாலும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கிரடாய் அமைப்பினர் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நாம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். நமது மாநிலத்தில் தற்போது நிலவும் நல்ல சூழ்நிலையில், தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டட விதிகளைப் பயன்படுத்தி அனைவருக்கும் வீடு என்ற நிலையை எட்டவும், நமது மாநிலத்தின் நகரங்களில் சிறந்த முறையில் திட்டமிட்ட வளர்ச்சியை ஏற்படுத்தவும், நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்று கிரடாய் உறுப்பினர்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

13-வது வருடாந்திர FAIRPRO 2020 கண்காட்சி வெற்றிகரமாக அமைய, கிரடாய் அமைப்பாளர்களுக்கும், கிரடாய் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும், கட்டட மேம்பாட்டாளர்களுக்கும், வீடுகளை வாங்குபவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை எளிய நடுத்தர மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம், பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தரமான வீடுகளை, குறுகிய காலத்தில், வழங்கிடும் வண்ணம் விரைவான நடவடிக்கைகளை கிரடாய் அமைப்பு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கடந்த மூன்று வருடங்களாக கிரடாய் அமைப்பின் பல்வேறு வீட்டு வசதி திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று கிரடாய் பெண் அமைப்பினர் பத்திர பதிவு தொகையை குறைப்பதற்கான கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். மேலும், சிங்கிள் விண்டோ சிஸ்டம் செயல்படுத்துவதற்கு ஏற்கெனவே கிரடாய் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்தும் உரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய முயற்சிகளுக்கு அம்மா அவர்களது அரசு என்றென்றும் உறுதுணையாக விளங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.