திருப்பூர்

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி – ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் முடிவு

ஈரோடு:-

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது. ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற அவைத்தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ, மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி..சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை கிராமங்கள்தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாட வேண்டும். மேலும் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், பகுதிகளிலும், பட்ஜெட்டின் சிறப்புகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கி நடத்த வேண்டும். ஆதரவற்றோர், முதியோர், குழந்தைகள் கருணை இல்லங்களில் உணவு வழங்கியும், உபகரணங்களும் வழங்க வேண்டும். ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள்,வேட்டி, சேலைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ந் தேதியை பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்ததற்கும், காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கும், சேலம் தலைவாசவில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்காவுக்கு ரூ. 900 கோடி மதிப்பீட்டில் அடிக்கல்நாட்டியமைக்கும் முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.