தற்போதைய செய்திகள்

நடப்பாண்டு 30 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

நடப்பாண்டு 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.தனபால், வருவாய் கோட்டாட்சியா (பொது) ராமசந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் மணிகண்டன், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்தாண்டு மற்ற ஆண்டுகளைவிட அதிக விளைச்சல் காணப்பட்டு 25 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பைவிட கூடுதலாக 30 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் நெல் கொள்முதல் செய்வதில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், உடனுக்குடன் அது சரி செய்யப்பட்டு விவசாயிகளின் நெல் தாமதமில்லாமல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இதன்பின்னர் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மூன்றாண்டு சாதனை விளக்க குறும்படம் திரையிடப்பட்டதை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார்.