தற்போதைய செய்திகள்

பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை…

சென்னை:-

பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேவையான சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

பாலியல் புகார்கள் தொடர்பாகத் தகவல்கள் வருவது வேதனைக்குரியது.சிறப்பாக பல்வேறு பணிகளைச் செய்து,தேசிய விருது,நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் இதுபோன்று ஓரிரு இடங்களில் தவறு நடைபெறுவது என்பது உண்மையில் வேதனைக்குரியது. தமிழகத்தை பொறுத்தவரை 3 லட்சத்து 72 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியைச் செய்பவர்கள் நம்முடைய துறையில் இருக்கிறார்கள்.இனிமேல் அதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்ற முறையில், அரசு அதற்கான சட்ட வடிவங்களை உருவாக்குதற்கு, முதல்வரோடு கலந்துபேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தகுதித் தேர்வைப் பொறுத்தவரை பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இப்போது தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு மீண்டும் ஒரு வார காலத்திற்கு பயிற்சி அளிக்கவுள்ளோம். பயிற்சி முடித்தவுடன், தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். இப்படி வாய்ப்பு அளிக்கும் போது அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.