கோவை

தமிழ்நாடு, newsகேரளா முதலமைச்சர்கள் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை – பொள்ளாச்சி வி.ஜெயராமன் தகவல்…

கோவை:-

ஆனைமலையாறு- நல்லாறு பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வரும், கேரளா முதல்வரும் இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.

கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பொள்ளாச்சி விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி பி.ஏ.தொழில்நுட்ப கல்லூரியில் உலக தென்னை தின விழா நடைபெற்றது. விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு, வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பனை விதைகள், அட்மா திட்டத்தில் பெண்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:- 

பொள்ளாச்சிக்கு தென்னை மரங்கள் தான் அடையாளம். தென்னை விவசாயம் செய்வதால் தென்னை, மட்டை, இளநீர் என பல பயன்கள் கிடைக்கிறது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு 95.21 ஆக உயர்த்தியது. இதன் பிறகுதான் தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தினர். மேலும் கிலோவிற்கு ரூ.5 விலை உயர்த்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்குவது போல கொப்பரைக்கும் வழங்கவேண்டும்.

தென்னையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீரா பானம் உடல் நலத்திற்கு ஏற்றது. நீரா பானத்தை பதப்படுத்தி வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது போல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். திப்பம்பட்டி வணிக வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் நீரா பானம் பாட்டிலிங் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் நீராபானம் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். இதன் மூலம் தென்னை விவசாயம் மேலும் வளர்ச்சி அடையும்.ஆனைமலையாறு, நல்லாறு பாசனத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றும் வகையில் இந்த மாத இறுதியில் தமிழக முதலமைச்சர், கேரளா முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இவ்வாறு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், வேளாண் விற்பனை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு,
வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ரவிக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி,
தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல்,
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.கிருஷ்ணகுமார் மற்றும் பத்மா ரகுநாதன், புகழேந்தி, அப்புகுட்டி, பத்மநாபன், நல்லசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.