சிறப்பு செய்திகள்

வாய்ச்சொல் வீரர்களுக்கு மக்கள் தொடர்ந்து தண்டனை வழங்குவார்கள் – முதலமைச்சர் உறுதி

தூத்துக்குடி

வாய்ச்சொல் வீரர்களுக்கு மக்கள் தொடர்ந்து தண்டனை வழங்குவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

வீரபாண்டிய பட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அம்மாவின் அரசு அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளை குவித்து வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த ஆளுமைமிக்க மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன். ஒரு சிலர் போல் நாங்கள் இல்லை.

வாய்ச்சொல் வீரராக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல், சாத்தியமான திட்டங்களை மட்டும் அறிவித்து அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. இதைக் கூறும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது, மூன்று பேர் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்கள். பரிசு விழுந்தால் கடவுளுக்கு சம பங்கு தருவோம் என்று முடிவு செய்தார்கள். சில நாட்களில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. பணத்தை வாங்குவதற்கு முன் மூன்று பேருக்கும் ஒரே சிந்தனை தோன்றியது. கடவுளுக்கு ஒரு பங்கு தருவோம் என்று சொன்னோமே, அப்படி தரக்கூடாது என்று முடிவு செய்தார்கள்.

அவசரப்பட்டு கடவுளுக்கு ஒரு பங்கு தருவதாக சத்தியம் செய்து விட்டோமே, அதிலிருந்து எப்படி தப்புவது என்ற சிந்தனையே மூவரின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது. சரி எவ்வளவு பங்கு? எவ்வளவுதான் கொடுக்கலாம்? என யோசித்த போது,
முதல் நபர், “தரையில் ஒரு சிறிய வட்டம் வரைவோம், எல்லாப் பணத்தையும், நாணயங்களாக்கி மேல் நோக்கி எறிவோம். சின்ன வட்டத்துக்குள் விழுவது கடவுளுக்கு”, என்றான்.

இரண்டாவது நபரோ, “கூடாது, கூடாது. மிகப் பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்று கொண்டு பணத்தை மேல் நோக்கி எறிவோம். அந்த வட்டத்துக்கு வெளியே எவ்வளவு பணம் விழுகிறதோ அது கடவுளுக்கு”, என்றான். இருவரும் சொன்னதைக் கேட்ட மூன்றாவது நபர், “சிறிய வட்டமாவது, பெரிய வட்டமாவது – பணத்தை மேலே வீசி எறிவோம். மேலே நின்று விடுகின்ற பணம் கடவுளுக்கு, கீழே விழுகின்ற பணம் நமக்கு”, என்றான்.

இவர்களிடம் நற்குணம் இல்லாதது மட்டுமல்ல, கடவுளை விட தாங்களே கெட்டிக்காரர்கள் என்ற ஆணவமும் இருந்தது. இவர்களைப் போன்ற சிலர், செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்வோம் என உண்மைக்கு மாறானவற்றை மக்களிடம் கூறி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டனர். ஆனால் அவர்கள் இந்த மூன்று நபர்களைப் போல் சொன்னதை செய்யவில்லை. அதற்கு வேறு விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட மக்கள், அவர்களுக்கு தக்க தண்டனையை சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வழங்கினார்கள். இனிமேலும் இதனை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருப்பார்கள் என நான் உறுதியாக கூறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்