தமிழகம்

கடலூர்- நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து – தமிழக அரசு உத்தரவு

சென்னை

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய ரசாயனம், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க கடந்த 2017-ல் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த திட்டத்தின் மூலம், அந்த கிராமங்களில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயன பொருட்கள் தொழிற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றை அமைத்து, எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், அப்பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 20-ந்தேதி சட்ட மசோதவை தாக்கல் செய்தார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மசோதா அன்றே நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளன.