தற்போதைய செய்திகள்

கடைமடை பகுதியில் பயிர் சாகுபடி, விளைச்சல் அமோகமாக இருக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி…

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை வரை தண்ணீர் வந்து விட்டது. விவசாயிகளின் பயிர்சாகுபடி, விளைச்சால் அமோகமாக இருக்கும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஜாம்பவனோடை கிராமத்தில் ஆசாத் நகர் கோரையாறு நீரொழிங்கியில் நீர்வரத்தை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து, உதவி பொறியாளர்களிடம் நீர்வரத்து குறித்து கேட்டறிந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

அம்மா அவர்களின் அரசு விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுகிற அரசு. இந்த ஆண்டு குறுவை சாகுபடி ஆழ்குழாய் கிணறு வைத்திருப்பவர்கள் மட்டும் சாகுபடி செய்திருந்தார்கள். சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வருமா, வராதா என்ற நிலை மாறி 10 நாட்களுக்குள் மேட்டூர் அணை நிரம்பி விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.

விவசாயிகள் அனைவரும் கடைமடை வரை தண்ணீர் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இக்கோரையாறு நீரொழிங்கியானது திருவாரூர் மாவட்டத்தினுடைய கடைமடையாகும். விவசாய சாகுபடிக்கு போதுமான தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி 24400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் சாகுபடியும், விளைச்சலும் அமோகமாக இருக்கும். இம்மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், வட்டாட்சியர் ராஜன்பாபு, மங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன், முத்துப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கே.பி.நடராஜன், இடும்பாவனம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி மற்றும் அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.