தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் தலைமையில் முன்னேற்றப் பாதையில் தமிழகம் பீடுநடை – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்

திருவண்ணாமலை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் முன்னேற்றப் பாதையில் தமிழகம் பீடுநடை போட்டு வருவதாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ்நிலையத்தில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

முதல்வர் தலைமையில் கழக அரசு மூன்றாண்டுகளில் காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, நீர்நிலைகளை பாதுகாக்க குடிமராமத்து பணி திட்டம், நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கியது, 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், வெளிநாட்டு பயணம் மூலம் 8835 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது, 2.05 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாட பொங்கல் பரிசுடன் ரூ. 1000 வழங்கியது, நடந்தாய் வாழி காவேரி திட்டம், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைத்தது, காவலன் செயலி, விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு, கல்வி தொலைக்காட்சி என எண்ணற்ற திட்டங்கள் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட எண்ணற்ற திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் நல் ஆளுமை திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம், கிருஷி கர்மான் விருதினை 5 முறை பெற்றது, ஊராட்சிகளில் மின்னணு ஆளுமை வலிமைப்படுத்துதல், குழந்தைகள் நேயம், வலுவான கிராம சபை செயற்பாட்டிற்கென 12 தேசிய விருதுகள், உடல் உறுப்பு தானத்தில் 5 முறை தேசிய விருது, ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக 104 விருதுகள், இணைய வழி கற்றலில் தேசிய விருது, உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்று தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, அரசு வழக்கறிஞர் க.சங்கர், ஆவின் மாவட்ட துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, எ.கே.குமாரசாமி,பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடிதிருமால், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத்தலைவர் பச்சையம்மாள், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ரமணிநீலமேகம், தொழிற்சங்க நிர்வாகி உதயசங்கர், மக்கள் செய்தி தொடர்பு துறை முத்தமிழன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது மேலும் மூன்றாண்டு சாதனை விளக்கப்படங்கள் வாகனத்தில் உள்ள திரையில் காண்பிக்கப்பட்டது.