தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிப்பு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்

விருதுநகர்

கழக ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநில துணை பொதுச்செயலாளர் மரியதாஸ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பாண்டிராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதிமுக ஆட்சிக்கு அனைவரும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் .

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிா்கோட்டை சுப்பிரமணியன், தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி, பொதுச்செயலாளர் சண்முகம், மாநில பொருளாளர் அரசப்பன், மாநில இளைஞரணி தலைவர் நாராயணன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், பலராம் இளைஞர் பாசறை செயலாளர் ஆரோக்கியராஜ், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.