தற்போதைய செய்திகள்

திறமைகளுக்கு ஏற்ற ஆசையை வளர்த்து கனவு காணுங்கள்: கட்டாயம் கைகூடும் மாணவர்கள், இளைஞர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை:-

தூண்டி விடும்போது தான் தீபத்தின் ஒளி பிரகாசமாக இருக்கும். எனவே மாணவர்கள், இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற ஆசையை வளர்த்து கனவு காணுங்கள். கட்டாயம் கைகூடும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை வருமாறு:-

“பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே”

என்ற கவியரசர் கண்ணதாசனின் பாட்டிற்கேற்ப, இந்தப் பட்டமளிப்பு விழா, வெற்றிகரமாக பட்டப்படிப்பை முடித்தமைக்காக உங்களிடையே பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வளமான எதிர்கால எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். மிக கடுமையான பாடத்திட்டங்களை வெற்றிகரமாக முடித்த உற்சாகமும், புதிய வேலையிலும், மேற்படிப்பிலும் சேரப்போகும் உற்சாகமும், உத்வேகமும் உங்கள் முகத்தில் நான் காண்கிறேன். நீங்கள் இக்கல்லூரியில் கழித்த மறக்க முடியாத நாட்களும், மிக உயர்ந்த எண்ணங்களும், பின்னி வளர்த்த நட்பும், அனுபவித்த சுதந்திரமும் உங்கள் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்த நாள் உங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாளாகும். நீங்கள் இன்று கல்லூரி நாட்களிலிருந்து விடைபெற்று ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.1996-ம் ஆண்டு எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ் நாடாரால் தொடங்கப்பட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் தற்போது பல்வேறு பிரிவுகளில் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர் என்றும், முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை 530 நபர்கள் மேற்கொள்கின்றனர் என்பதை அறிவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நிறுவனம் ஆண்டுதோறும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை உயர்கல்வி பயில நிதி உதவி வழங்கி வருவது, ஏழை மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற இந்த நிறுவனத்தின் உயரிய நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறது, இது பாராட்டுக்குரியது.

தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு, உலகத்தரம் வாய்ந்த உயர் கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தனியார் பல்கலைக்கழகம் துவங்குவதற்கு, எஸ்.எஸ்.என். நிர்வாகத்திற்கு அம்மாவின் அரசு, ஒரு பிரத்யேக சட்டத்தை இயற்றி அனுமதி வழங்கியுள்ளது. இப்பல்கலைக்கழகத்தை விரைவில் துவக்க வேண்டும் என்பதை அன்புடன் இந்நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறேன். உயர்கல்வித் துறையில் அம்மாவின் அரசு நிகழ்த்தியுள்ள சாதனைகள் சிலவற்றை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக குறிப்பிட விரும்புகிறேன்.

“கல்லூரிகளில் 50 சதவீதத்தினருக்கும் மேல் கல்வி பயில வகை செய்தல் எனது நோக்கமாகும்” என்ற அம்மா அவர்கள், தமிழ்நாட்டில் 65 புதிய கல்லூரிகளை துவக்கினார். அம்மாவின் வழியில் வந்த இந்த அரசும், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கியுள்ளதுடன், 5 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் துவக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, உயர்கல்வித் துறைக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தியது.

மேலும், தமிழ்நாடு அரசு எப்பொழுதும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. முதல் தலைமுறை மாணவர்களுக்கு கட்டணச் சலுகை, இலவச கல்வி வழங்குதல், தமிழ்வழி கற்கும் மாணவர்கள் மற்றும் ஆதிதிராவிட பழங்குடி மாணவர்களுக்கு உதவித் தொகை அளித்தல், சிறப்புப் பயிற்சி அளித்தல், ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல், இலவச விடுதிகள், இலவச பேருந்துக் கட்டணம், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கல்வி கிடைக்க விலையில்லா மடிகணினி அளித்தல் ஆகிய திட்டங்களின் விளைவாக, 2011-ம் ஆண்டு 34 சதவீதமாக இருந்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை, தற்போது 49 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, அம்மாவின் அரசு, மேலும் பல திட்டங்கள் உயர் கல்வியினை ஊக்குவிக்க செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக• ஆண்டுதோறும், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்களுக்கு, 15 நாட்கள் அயல் நாட்டில் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வகையில், கலை அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், தொழிற் கற்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் அதிக அளவில் எண்ணற்ற சாதனைகளை கல்வித்துறையில் எங்களுடைய அரசு நிகழ்த்தி வருகிறது.

• ஒரே ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, அம்மாவின் அரசு, 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது.

• கல்விக்கென தனியாக கல்வித் தொலைக்காட்சி ஒன்றினை தமிழ்நாடு அரசு துவக்கி, அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.2020-2021-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 5 ஆயிரத்து 52 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு கல்விக்கு அளித்து வரும் சிறப்பு கவனத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

“வெறும் கல்வி என்பது தேடலுக்கு மட்டும் விடையளிக்கும், ஆனால் பண்பாடு மனிதத்தை மேலும் வளர்த்தெடுக்கும்” என்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, பொருளாதார பரிணாம வளர்ச்சியுடன் மட்டும் நின்று விடுவதில்லை. உணவு, கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உடை ஆகியவற்றுக்கு வகை செய்யும் ‘பொருள் வசதி’ மிக முக்கியமானது தான். அதே நேரம், வாழ்க்கையை கற்க, மனிதனின் உள்ளம் மேன்மையடைய, இலக்கியம், சிந்தனைகள், நீதிக் கதைகள் ஆகியவை வழியே கிடைக்கும் மனிதநேயம், அன்பு, விவேகம் ஆகிய வாழ்க்கை கல்வியைப் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது. இவை அனைத்தையும் ஒருங்கே கற்பவனே ஒரு முழு மனிதன் ஆவான். இதைத்தான் “பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் குறிப்பிட்டார்.

“விலை மதிப்பில்லா மாணவப் பருவத்தில், படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். படித்து முடித்தவுடன் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட உங்கள் லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்” என்றார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மாணவப் பருவத்தில் சிந்தனைகள் பல வழிகளிலும் செல்வது உண்டு. பல லட்சியங்கள் மனதில் உருவாகும். அவற்றை வெளிப்படுத்தும் முறைகளை ஒழுங்காக வரையறுப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு ஆசிரியர்களின் அறிவுரை மிகவும் இன்றியமையாதது. ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாட நேரத்தில் ஒரு சிறு மணித்துளியாவது ஒதுக்கி, தன் மாணவர்களுடன் கலந்துரையாடி, மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

தூண்டி விடும்போது எப்படி தீபத்தின் ஒளி பிரகாசம் அடைகிறதோ, அதுபோல் மாணவர்களிடம் “நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள், உங்களிடத்திலே ஒளிந்துள்ள குறிக்கோளை அடையும் வெற்றி வெகுதூரத்தில் இல்லை. கைக்கு எட்டிவிடும் தூரத்தில் உள்ளது” என அவர்களின் மனதைத் தொடும் வகையில் உரையாடினால், அவர்களிடம் மறைந்துள்ள திறமைகள் தூண்டப்பட்டு, அதனை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் தானாக மனதில் உருவாகும்.

ஒரு சிறு மணித்துளி உரையாடல் மாணவர்களிடையே பெரிய மாற்றத்தை நிச்சயமாக உருவாக்கும். கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்கள், பேரறிஞர் அண்ணாவின் வாக்கான “எதையும் தாங்கும் இதயம்” கொண்டவர் களாகவும், வாழ்க்கையில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் திறன் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

“வெல்ல முடியாத சக்தி உன்னுள் உள்ளது. ஒரு முறை உலகத்தைச் சுற்றிப்பார். அங்கெல்லாம் மக்களின் வாழ்க்கை எவ்வளவு வேகத்தோடு இயங்குகிறது என்பதைக் காண்பாய். அதற்கு வழி உன் கைக்குள்ளேயே இருக்கிறது. உன் கண்களை நீயே கட்டிக் கொண்டு என்னால் பார்க்க முடியவில்லை என்று கூறுகிறாய். கண்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை கிழித்தெறி, உலகமே பட்டப் பகலாய் ஒளிப்பெற்றுத் திகழ்வதைக் காண்பாய். அதைப் பயன்படுத்தி சொந்தமாக தொழில் செய்து வெற்றியாளனாகத் திகழ்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

• நாம் ஓர் இயல்புடன் பிறந்தாலும், நமது இயல்பை தாண்டி செயல்படக்கூடிய திறனுடன் படைக்கப்பட்டுள்ளோம்.
• நாம் சாதாரண குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் நம் வாழ்நாளில் பல சிகரங்களை நம்மால் தொடமுடியும், ஒரு தொழிற்புரட்சியை நம்மால் உருவாக்க முடியும்.

• நாம் யாராக இருந்தோம், யாராக இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் யாராக இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறோமோ, அதுதான் முக்கியம். நமக்குத் தேவை நம்பிக்கை, உழைப்பு, மன உறுதி ஆகியவையாகும்.
இதனை நினைக்கும்போது எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் கூறிய கதை என் நினைவுக்கு வருகிறது.
ஒரு கிராமத்தில் ஒரு வயதான மனிதர் இருந்தார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்கள் வீட்டு வாசலிலே முன் வழியை இரண்டு பெரிய மலைகள் அடைத்துக் கொண்டிருந்தன.

எப்பாடுபட்டாவது அந்த இரண்டு மலைகளையும் இடித்துத் தள்ளி, அதை தரைமட்டம் ஆக்கிவிட முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கை, உடனே செயலில் இறங்கினார்கள். இரண்டு பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டார். கடப்பாறைகளை எடுத்து உடைக்க ஆரம்பித்தார்.வயதான காலத்திலே இப்படிப் பிள்ளைகளோட உட்கார்ந்து, இவர் மலையை உடைப்பதை, அந்த வழியாக போகும் மக்கள் பார்த்துக் கொண்டே சென்றனர்.

அவர்களுக்கு சிரிப்புத்தான் வந்தது! அந்தப் பெரியவருக்கு வேண்டிய நபர் ஒருவர், “ஏங்க….நீங்க செய்யும் வேலையிலே ஏதாவது அர்த்தம் இருக்கா? மலை எவ்வளவு பெரிசு, அதை நீங்க மூன்று பேரும் சேர்த்து உடைத்துத் தள்ளிவிட முடியுமா? பேசாமே இதை விட்டு விட்டு ஏதாவது உருப்படியான வேலை இருந்தா அதைச் செய்யுங்க!” என்று சொன்னார்.

“என்ன சொன்னீங்க? நாங்க மூன்று பேர் தானே இருக்கிறோம் என்பதாலே தானே இப்படி சொல்கிறீர்கள்? அதனால் என்ன? நானும் என் பிள்ளைகளும் ஆரம்பித்த வேலையை, எங்களுக்குப் பிறகு எங்களது பேரப் பிள்ளைகள் தொடர்ந்து செய்வாங்க. இப்படி வாழையடி, வாழையாக இந்த வேலை தொடரும்! ஒரு கட்டத்தில் இந்த இரண்டு மலைகளும் தரைமட்டமாகும். இப்போதைக்கு இது இரண்டும் பெரிய மலைதான் அதை ஒப்புக் கொள்கிறேன்” என்றார்.

“ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இது ஒரு அங்குலம் கூட வளரப் போவதில்லை. ஆகையினாலே நாங்கள் உடைக்க உடைக்க அது குறைஞ்சிக்கிட்டேதான் வரும். என்றைக்காவது ஒரு நாள் என்னுடைய வாரிசுகள் இந்த மலைகளை தரைமட்டமாக்கு வாங்க! வாசல் வழியை நன்றாக அமைப்பார்கள்! அந்த நம்பிக்கை எனக்கு உண்டு!” என்று சொல்லிவிட்டு தனது பணியை தொடர்ந்தார். இந்தப் பணி இரவு, பகலாக தொடர்ந்து நடந்தது. இவர்களின் உழைப்பைப் பார்த்த கடவுள் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அவர்களுடைய உழைப்பையும் – உழைப்பின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் இரண்டு தேவதைகளாக உருவாக்கினார். ஒரு நாள் இரவோடு இரவாக அந்த இரண்டு மலைகளையும் அகற்ற வைத்தார். மறுநாள் காலையிலேயே விடிந்து பார்க்கிறார்கள், மலை இருந்த இடம் காலியாக இருந்தது, பெரியவரும் அவருடைய பிள்ளைகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இந்தக் கதையில் வரும் இரண்டு மலைகள் ஒன்று வறுமை, இன்னொன்று பற்றாக்குறை. இரண்டு தேவதைகள் ஒன்று உழைப்பு, மற்றொன்று நம்பிக்கை.பொதுமக்கள்தான் கடவுள். திறமை – வலிமை – பொறுமை இதுதான் அந்தப் பெரியவர், அவருடைய இரண்டு பிள்ளைகள். உறுதியோடும், நம்பிக்கையோடும் செயல்பட்டால் எந்தவிதத் தடையையும் உடைத்தெறிய முடியும் என்பதுதான் இந்தக் கதையின் மையக் கருத்து.

எனவே இந்த கதையில் கூறியது போல் நீங்கள், நம்பிக்கை, திறமை, வலிமை, உறுதியுடன் செயல்பட்டால், தடை கற்களை தகர்த்து, நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக உருவாகி, நமது நாட்டை தொழில் வளர்ச்சியில் உன்னத நிலைக்குக் கொண்டு வரமுடியும் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
“உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்;
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்”
என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, மாணவர்கள், இளைஞர்கள் தங்களை முதலில் அறிய வேண்டும். அறிந்ததின் விளைவாக திறமைகளை வளர்க்க வேண்டும். திறமைகளுக்கு ஏற்ற ஆசையை வளர்த்து, கனவையும் காணவேண்டும். அவ்வாறு செய்தால் தங்களின் கனவு கட்டாயமாகக் கைகூடும்.இன்று பட்டம் பெறும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கு சுய வாழ்விலும், சமுதாய வாழ்விலும் வெற்றி பெற எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.எஸ்.என். கல்விக் குழுமம் ஒரு சிறந்த நிர்வாகத் திறமைமிக்க குழுமம். அந்த எஸ்.எஸ்.என். கல்விக் குழுமத்தில் பயின்றிருக்கின்றீர்கள். எஸ்.எஸ்.என். கல்விக் குழுமம் என்று சொன்னால், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் இதற்கு ஒரு தனிச் சிறப்பு, அந்தஸ்து இருக்கிறது. அப்படி அந்தஸ்தும், பெருமையும் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கை நிச்சயமாக எதிர்காலத்தில் ஒளிமயமாக விளங்கும். அதுமட்டுமல்ல, எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கிறார்கள், செல்வம் இருக்கும், ஆனால் மனம் இருக்காது.

செல்வமும், மனமும் உள்ள ஒருங்கே பெற்ற நிர்வாகம் எஸ்.எஸ்.என். நிர்வாகம் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். சிவ் நாடாரும், அவரது புதல்வியும் என்னை சென்னையில் சந்தித்து, நாங்கள் சென்னையிலே ஒரு பிரைவேட் யுனிவர்சிட்டி ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார்கள் அதற்கு எங்கள் அரசு திறந்த மனத்துடன் அனுமதி அளிக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அதோடு, எஸ்.எஸ்.என். கல்விக் குழுமம் இன்றைக்கு கிராமப்புறத்தில் இருக்கின்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அறிவுப்பூர்வமான கல்வியை இந்த நிறுவனம் கொடுப்பதாக காலையிலே என்னிடத்திலே தெரிவித்தார்கள்.

6-ம் வகுப்பு முதல் பள்ளி பருவம் முடிகின்ற வரை நல்ல கல்வியைக் கொடுத்து, அதற்குப் பிறகு தங்களுடைய கல்லூரியிலேயே உயர்கல்வி படிப்பதற்கும் அவர்கள் வசதி, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகச் சொன்னார்கள். உண்மையிலேயே எஸ்.எஸ்.என். குழுமத்தைப் பாராட்டி, ஏழை, எளிய, கிராமப்புற மக்களுடைய உயர்வுக்கு தொடர்ந்து உறுதுணை அளிக்கின்ற எஸ்.எஸ்.என். நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர்
அபூர்வா, ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.