மதுரை

சிறப்பான நிர்வாகத்தை நடத்தி புரட்சித்தலைவி அம்மாவிற்கு புகழ் சேர்க்கிறார் முதலமைச்சர் – வி.வி.ராஜன் செல்லப்பா புகழாரம்

மதுரை, பிப். 24-
சிறப்பான நிர்வாகத்தை நடத்தி புரட்சித்தலைவி அம்மாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புகழ் சேர்க்கிறார் என்று மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் 56-வது வார்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி ராஜன்செல்லப்பா அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

உலகத்தில் தனது பிறந்தநாளை எனது இல்லம் நாடி வர வேண்டாம், ஏழை எளிய மக்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் என்று கூறிய ஒரே தலைவர் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.இன்று அம்மா நம்மிடம் இல்லை என்றாலும் கூட அம்மாவின் பிறந்த நாளில் அவர் நினைத்தபடி நலத்திட்ட உதவி வழங்குங்கள் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எங்களுக்கு ஆணையிட்டு உள்ளனர்.

குறிப்பாக முதலமைச்சர் சிறுபான்மையின மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். கிறிஸ்தவ தேவாலயங்களை புதுப்பிக்க ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளார் அதேபோல் மசூதிகளை சீரமைக்க ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை ஒரு கோடியாக உயர்த்தியுள்ளார்.

உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தி உள்ளார். அதேபோல் ஹஜ் பயணிகள் தங்குவதற்கு கட்டடம் அமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். ஹாஜிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாயாக கொடுத்துள்ளார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அம்மா வழியில் சிறப்பான நிர்வாகத்தை நடத்தி அம்மாவின் புகழ் சேர்த்து வருகிறார் முதலமைச்சர்.

ஆனால் ஸ்டாலின் சிறுபான்மை மக்களிடத்தில் தேவையில்லாத பொய் பிரச்சாரத்தை பரப்புகிறார். தர்மம் என்றைக்கும் தோற்றதில்லை. அதர்மம் என்றைக்கும் நிரந்தரமில்லை ஆகவே ஸ்டாலின் பொய் பித்தலாட்ட பிரச்சாரத்திற்கு சிறுபான்மை மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர் செல்லப்பாண்டி, திருப்பாலை பகுதி கழக செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் புதூர் அபுதாகிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.