தற்போதைய செய்திகள்

பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – ஸ்டாலின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

மதுரை

பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் ஸ்டாலின் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது நாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது அன்னதான நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

அம்மாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆகியோரின் நல்லாசியுடன் கழக அம்மா பேரவை சார்பிலும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம், நலிவடைந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது

பிப்ரவரி 24 ம்தேதியை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்து அதற்கான அரசாணையும் துறை ரீதியாக வெளியிட்டு அம்மாவிற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்து ஒரு புரட்சியை செய்துள்ளார் முதலமைச்சர். இன்றைக்கு காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான சட்டவரைவு மசோதாவையும் சட்டப்பேரவையில் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். அதற்கு தற்போது ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது அதனை ஒட்டுமொத்த விவசாய பெருங்குடி மக்களும் வரவேற்றுள்ளனர்

சிறந்த சேவை புரிந்த சிவந்திஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்து இதன் மூலம் திறமையானவர்களுக்கும் நற்பணிகள் செய்பவர்களுக்கும் மரியாதை தரும் அரசு அ.தி.மு.க.அரசு என்பதை முதலமைச்சர் நிரூபித்துள்ளார். இந்தியாவிலேயே நிர்வாகத்தில் சிறப்பாக செயலாற்றும் மாநிலமாக தமிழகம் முதன்மை இடம் பெற்றுள்ளது. இந்த சாதனையை அம்மாவின் பிறந்தநாள் பரிசாக தாய் நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் தனது அயராத உழைப்பால் வழங்கியுள்ளார்

குடிமராமத்து திட்டம் என்பது விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் திட்டமாகும் காலம் காலமாக தூர் வாராத கண்மாய்களை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்மாய்களை இந்த மூன்று ஆண்டுகளில் முறையாக தூர்வாரியதன் காரணமாக இன்றைக்கு நிலத்தடி நீர் ஆதாரப்பூர்வமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். குற்றம்சாட்டுவதை குல தொழிலாக ஸ்டாலின் கொண்டுள்ளார்.

அதேபோல் குடியுரிமை சட்டத்தை பற்றி சிறுபான்மை மக்களிடத்தில் பொய் பிரச்சாரம் செய்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே திமுக அரசின் போது தான் NPR எடுக்கப்பட்டது. அதிலே புதிதாக சேர்க்கப்பட்ட தாய், தந்தையின் பிறப்பிடம் குறித்த மத்திய அரசு சார்பில் வழிகாட்டி அமைப்பின் விளக்கம் கேட்டு எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு எடுக்கப்பட உள்ள கணக்கெடுப்பில் அதில் எந்தவித ஐயப்பாடும் யாருக்கும் கிடையாது.

NPR ஐ பொறுத்தவரையில் 2010 ம்ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது அதற்கு முதலில் ஆதரவு கொடுத்தது திமுக தான் ஆகவே இவர்கள் இன்றைக்கு மக்களை திசைதிருப்பி குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சட்டசபையில் CAA சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா என்று முதலமைச்சர் கேட்டபோது ஸ்டாலினால் பதில் கூற இயலவில்லை. ஆதலால் அதுகுறித்து எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாக தெரியவருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் ஆதாரத்துடன் கூறி இருந்தால் அதற்கு ஆதாரத்துடன் முதல்வர் பதில் கூறி இருப்பார்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி தான் எனது துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை சட்டசபையில் கூறியிருந்தேன். இதில் ஸ்டாலின் என்ன முரண்பாடு கண்டார் என்பது தெரியவில்லை. உறுதியாக குடியுரிமை திருத்த சட்டத்தினாலும், NPR சட்டத்தினாலும் எந்தவித பாதிப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது. இன்றைக்கு மதுரையில் திமுக கட்சியில் இணைப்பு விழா என்று கூறி அவர்களது கட்சியினரையே இணைக்கும் விழாவை நடத்துகிறார்கள். ராஜகண்ணப்பன் நிலைப்பாட்டை பார்த்து அனைவரும் அவர் மீது பரிதாபப்படுகிறார்கள். திமுக என்கிற மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜகண்ணப்பன் சேர்ந்து இருப்பது, அந்த கப்பலுக்கும் ஆபத்து இவருக்கும் ஆபத்து.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஐயப்பன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.