தற்போதைய செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை அறிவித்து பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தவர் எடப்பாடியார்- கே.ஏ.பாண்டியன் பெருமிதம்

கடலூர்

புரட்சிதலைவி அம்மாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ந்தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து பெண் இனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமை சேர்த்துள்ளார் என்று அம்மா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ பேசினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகர கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு 231 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் வாழ்ந்த போதே தனது பிறந்தநாளில் தனது இல்லத்திற்கு கழகத் தொண்டர்கள் யாரும் வரக்கூடாது. கழகத் தொண்டர்கள் அனைவரும் அவரவர் ஊரிலேயே தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டவர். அவர் தற்போது நம்மிடையே இல்லை.

ஆனால் இப்போதும் அவர் பிறந்த நாளில் நாம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அன்னதானங்களையும் வழங்கி வருகின்றோம். புரட்சித்தலைவர் கண்ட இந்த இயக்கம் கட்டுக்கோப்பான ஒரு இயக்கம் என்பதற்கு இதைவிட சான்று வேறு இருக்க முடியாது. தனது ஆட்சிகாலத்தில் ஏழை எளிய மக்கள் இருக்கக்கூடாது, ஏழை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு ஆட்சி நடத்தியவர் அம்மா.

அம்மா கண்ட கனவை மெய்ப்பிக்கும் வகையில் இன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். காவேரி டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக காவேரி பாயும் மாவட்டங்களை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்து வரலாற்றில் முதலமைச்சர் இடம்பெற்றுள்ளார். கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இந்த திட்டத்தின் கீழ் வருகின்றன.

அம்மா அவர்கள் தனது ஆட்சி காலத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்று சொல்லுக்கு ஏற்ப மகளிர் காவல் நிலையம், பெண் கமாண்டோ திட்டம் மற்றும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் மாடு என அனைத்தையும் பெண்களுக்கே வழங்கியவர் அம்மா.

அவர் பிறந்த பிப்ரவரி 24-ந்தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது தேர்தலில் சிதம்பரம் நகராட்சியை கைப்பற்றி சிதம்பரம் கழகத்தின் கோட்டை என நிரூபித்து முதல்வரின் காலடியில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர கழக செயலாளர் தோப்பு கே.சுந்தர், முன்னாள் நகர பால்வளத் தலைவர் சீ.கே.சுரேஷ்பாபு, பரங்கிப்பேட்டை ஒன்றியம் அம்மா பேரவை செயலாளர் கோவி.ராசாங்கம், நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கருப்பு எம்.ராஜாமாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என் குமார், சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பு.தா.இளங்கோவன், தலைமை கழக பேச்சாளர் ஏ.வி.சி கோபி, மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.