சிறப்பு செய்திகள்

மக்களை தேடிச் சென்று உதவி செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான் – துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தேனி

மக்களை தேடிச் சென்று உதவி செய்யும் ஒரே இயக்கம் கழகம் மட்டும் தான் என்றுதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேனியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த தினவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமானளன ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை யாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை வெகு சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக செய்த தியாகங்கள், திட்டங்களால் தமிழக மக்களால் போற்றப்படுகின்ற தலைவராக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் பல கட்சி தலைவர்கள் உள்ளனர். அவர்களின் பிறந்த நாளை அவர்களே எவ்வாறு ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள்.

தொண்டர்கள் தங்கள் தலைவரின் பிறந்த நாளை எவ்வாறு ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது பிறந்த நன்னாளில் யாரும் என்னை இல்லம் தேடி வர வேண்டாம். நீங்கள் ஏழை, எளியோரின் இல்லங்களை நாடிச்சென்று அவர்களுக்கு பல்வகையான உதவிகளை செய்ய வேண்டும். இல்லாதவர்கள் யாரென்று பார்த்து பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நமக்கு கட்டளையிட்டுள்ளார்.

உலக வரலாற்றிலேயே தனது பிறந்த நாளன்று ஏழை எளியோரை நாடிச் சென்று அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறிய ஒரே தலைவர் நமது புரட்சித்தலைவி அம்மா மட்டுமே. அவருடைய நல்ல யோசனைகளை செயல்படுத்தும் விதமாக மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு உதவுதல், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த நாளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தங்கமோதிரம், இலவச திருமணங்கள் என பல நல்ல செயல்களை செய்திருக்கிறோம்.

படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் என பார்த்;து பார்த்து நலத்திட்டங்களை கடந்த காலங்களில் செய்து வந்துள்ளோம். மக்களை நாடிச் சென்று உதவி செய்யும் ஒரே இயக்கமாக இருப்பது நமது கழகம் மட்டுமே.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 28 ஆண்டுகாலம் என நமது இயக்கத்தை 1972-ல் நமது இயக்கம் மக்கள் இயக்கமாக உருவாக்கி 48 ஆண்டு காலத்தில் கழகத்திற்கு ஏற்பட்ட சோதனைகள், வேதனைகளை எல்லாம் தாங்கி மக்களாட்சியாக உருவாக்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில் தமிழகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையை சிரமமின்றி நடத்திட வேண்டுமென்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார்.

கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எனவே அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாணவ மாணவிகளுக்கு 16 வகையான கல்வி உபகரணங்களை கொடுத்து இன்று கல்விதாயாக விளங்கி கொண்டிருக்கின்றார். அதன் மூலம் இன்று தமிழகம் கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. மருத்துவ சேவையை எடுத்துக் கொண்டால் தமிழக அரசின் மூலமாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்தை பார்த்து தான் தற்போது மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு என பல திட்டங்களை தீட்டி அவர்களுக்கு திருமண நிதி மற்றும் தாலிக்கு தங்கம் 8 கிராம், பேறுகால நிதியாக ரூ.18 ஆயிரம் என பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மக்களின் தேவைகளை உணர்ந்து பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி மக்கள் பணம் மக்களுக்கே என்று செயல்படுத்தினார். தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளான முல்லைபெரியாறு, காவேரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் சென்று வாதாடி நமது உரிமையை நிலைநாட்டினார். தற்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மிடம் இல்லாத நேரத்திலும் பொறுப்பை உணர்ந்து நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மக்களுக்காக புதுப்புது திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

அதேபோல தற்போது நடைபெற்று வருகின்ற புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் நமது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நமது நெல் விளையும் பூமி காவேரி டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். தமிழக மக்களுக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும், பிரச்னை ஏற்பட்டாலும் அவற்றை தீர்க்க கூடிய செயலை தான் நமது அம்மா அரசு செய்து வருகிறது.

இவ்வனைத்தையும் நமக்கு உருவாக்கி தந்த, அடிப்படை ஆதாரங்களை உருவாக்கி தந்த இயக்கத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என பாடம் கற்பித்து தந்த இந்த இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறு சரிவுகளை சந்தித்தாலும் அந்த சரிவை காட்டிலும் உயர்ந்த வெற்றியை உருவாக்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை நாம் வெகு சிறப்பாக கொண்டாடுவோம். புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் காலை முதல் மாலை வரை தேனி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் செய்ய இருக்கின்ற நலத்திட்டங்களை தெரிவித்தனர்.

கடந்த 2013-ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த நாளில் தேனி மாவட்டத்தில் இருதய சிகிச்சை யாருக்கு தேவைப்படுமோ அவர்களுக்கு இலவச சிகிச்சைக்கு உதவுகிறேன் என்று அறிவித்தேன். இதன்படி இன்று வரை 3 முதல் 60 வயது வரையுள்ள 174 பேர் இருதய அறுவை சிகிச்சை செய்து நலமாக இருக்கிறார்கள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன்சக்கரவர்த்தி நன்றி கூறினார்.