சிறப்பு செய்திகள்

நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் 3-ம் ஆண்டு தொடக்க விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா வாழ்த்துச் செய்தி வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளாகிய நமது புரட்சித் தலைவி அம்மா நாளேடு 24.2.2020-ல் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே நமது புரட்சித்தலைவி அம்மா நாளேடு கழக உடன்பிறப்புகள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பி படிக்கப்படுகின்ற வண்ண ஏடாக நாள்தோறும் மலர்வது பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.

கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகம். இலக்கிய ஆர்வமும், படிப்பதில் அக்கறையும் தமிழக மக்களிடம் ஆழமாக வேரூன்றிய விழுமியங்கள். உலகம் போற்றும் தனிச் சிறப்பு கொண்ட நூல்கள் பல தமிழ் மக்களின் அறிவின் விசாலத்திற்கு சான்றாக தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியுள்ளன. இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட மக்களுக்கு நாள்தோறும், படிக்கத்தக்க கருத்துகளுடன் செய்தித்தாளை வழங்குவது என்பது சவாலான பணியாகும். நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியரும், அவருடன் பணியாற்றும் நண்பர்களும் அப்பணியை திறம்பட செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசும் ஆற்றிவரும் மக்கள் நலப் பணிகளையும், தமிழ்த் தொண்டினையும் இன்னும் சிறப்புடன் வழங்கிட நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆற்றும் பணிகள் பயன்படும் என்பதில் ஐயமில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ்போல, நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழும் புகழ்பெறட்டும், மக்களுக்குப் பயன்தரட்டும் என்று உளமார வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர்

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாளாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் “நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ்” இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி, மகிழ்ச்சியில் என் நெஞ்சம் நிறைகிறது. சில நாளிதழ்கள் வதந்தியை ‘தீயாக’ மாற்றுகின்றன. அதில் மக்கள் நலன் பற்றி எரியும். ஆனால், “நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ்” வேள்வித் தீயை, சத்தியத் தீயை வளர்க்கிறது. அதில் சில பொய்முகங்கள் பொசுங்கிச் சாம்பலாகிறது. அநீதியை அழித்து அமைதியை வளர்க்கிறது.

இதய தெய்வம் அம்மா அவர்களின் புகழை, அம்மா ஆட்சியின் சிறப்புகளை திசையெங்கும் பரப்பி… விசுவாசத் தொண்டர்களின் இதயங்களை நிரப்பி, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ்” மென்மேலும் பல சாதனைகளை படைக்க, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புனிதப் பாதையில் என் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து மகிழ்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.