தமிழகம் தற்போதைய செய்திகள்

இன்று அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழா : திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாட சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தலைமை கழகத்தில் உள்ள அம்மா அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். பின்னர் கழக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கழக உடன் பிறப்புகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளையொட்டி ஆடம்பர விழாக்களை தவிர்த்து கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதன்படி மாநிலம் முழுவதும் மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். மேலும் கண்தானம், ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இது தவிர மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்குகின்றனர். மேலும் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களிலும் அன்னதானம், வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

மேலும் அம்மா பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியம், கிளைக்கழகங்கள் தோறும் அம்மாவின் திருவுருவ படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் பட்டி தொட்டியெங்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாடல்களை ஒலிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அம்மாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.