தற்போதைய செய்திகள்

செம்போடையில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்…

நாகப்பட்டினம்:-

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்போடை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் கடந்த 2019-2020 சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் மற்றும், நாகப்பட்டினம் மாவட்டம், செம்போடை ஆகிய இரண்டு இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் துவங்கும் வகையில் தற்காலிகமாக வேதாரண்யம் வட்டம் செம்போடை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விடுதி வசதியுடன் கூடிய புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம், பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்புடன் இனிதே துவங்கப்பட்டுள்ளது. இதற்கென பள்ளி வளாகத்தில் உள்ள சில கட்டிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அமைவதற்கு தேவையான, பொருத்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் நிர்வாகக் கட்டிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன், தொடர்ந்து புதிய வளாகத்தில் செயல்படத் துவங்கும்.இந்த அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 1 வருட தொழிற்பிரிவான கம்மீயர் டீசல் பிரிவும், 2 வருட தொழிற் பிரிவுகளான ஸ்பென்னீங் டெக்னீசியன், மின்சார பணியாளர், நில அளவையாளர், கெமிக்கல் ப்ளாண்ட் பராமரித்தல் உள்ளிட்ட 5 தொழிற் பிரிவுகள் மொத்தம் 216 இருக்கையிடங்களுடன் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கலை, அறிவியல் பாடப்பிரிவுகள் மட்டுமல்லாது, தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி பெற்று, தொழில்துறைகளில் சிறந்து விளங்க வேண்டுமென்பதே நமது அரசின் முக்கிய நோக்கமாகும். தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் சார்ந்த நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பதுடன், தத்துவார்த்தமான அறிவை நடைமுறை அனுபவமாக மாற்ற வாய்ப்பளிக்கப்படுகிறது. மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அதன் வாயிலாக அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

அதனடிப்படையில், கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு படித்தவுடன் வேலை அல்லது சுயதொழில் செய்யும் வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் விதத்தில் தொழில் மற்றும் வேலைப்புள்ள பாடப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள இந்த அரசுத் தொழிற்பயிற்சி நிலையமானது, இப்பகுதி மாணவ மாணவிகளுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். மாணவ மாணவிகள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், நாகப்பட்டினம் சார் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு, தேத்தாக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.கிரிதரன், தொழிற்பயிற்சி நிலையங்களின் மண்டல இணை இயக்குநர் ஜான் போஸ்கோ, நாகப்பட்டினம் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜீவானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.