சிறப்பு செய்திகள்

கோவை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் 33-வது ஆண்டாக ரத்ததான முகாம் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளையொட்டி கோவை சுகுணாபுரத்தில் கோவை புறநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், மரக்கன்று நடுதல், கண்தானம், ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்கள் உள்பட நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஏழை எளியவர்களுக்கு தாய் வீட்டு சீதனமாக அனைத்து சீர்வரிசைகளையும் இலவசமாக தந்து திருமணமும் நடத்தி வைக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72- வது பிறந்த தினத்தையொட்டி கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் கோவை புறநகர் மாவட்டக் கழகம் சார்பில் ரத்ததான முகாம் தொடர்ந்து 33-வது ஆண்டாக நடைபெற்று வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்புமிகு ஆட்சியை நடத்தி வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

முன்னதாக சுகுணாபுரத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.