சிறப்பு செய்திகள்

புரட்சித்தலைவியின் 72-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை

இதயதெய்வம் புரட்சித்தலைவியின் 72-வது பிறந்தநாள் விழா தலைமைக் கழகத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கழக ஒருங்கிணைப்பாளர்கள் அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் 72 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினர். தொடர்ந்து நலிந்த குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.1.37 கோடி நிதியுதவியை கழக ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கினர்.

கழக நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் அரும்பணியாற்றிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளான நேற்று காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர்.

பின்னர், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள “புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 72-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை’’, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட, முதல் பிரதியை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, அங்கே குழுமியிருந்த நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணிவேராகத் திகழும் கழக உடன்பிறப்புகள், கழகப் பணிகளில் ஈடுபடும்போது, பல்வேறு காரணங்களால் மரணமடைய நேரிட்டால், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாயுள்ளத்தோடு அவர்தம் குடும்பத்தினருக்கு, கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியை வழங்கி வந்துள்ளார். அதன்படி, தலைமைக் கழக கூட்ட அரங்கில், அம்மா அவர்களின் வழித்தோன்றல்களாகத் திகழும் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது அன்புக்கரங்களால், பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 14 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 28,00,000 ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கி, கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், `மே’ தினத்தை முன்னிட்டு கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கான நிதியுதவியை, தாயுள்ளத்தோடு பல ஆண்டுகளாக வழங்கி வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்கள் 109 பேர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 9 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்கி, தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள். ஆக மொத்தம் நேற்று மட்டும் 123 பேர்களுக்கு, 1 கோடியே 37 லட்சம் ரூபாயை கழகத்தின் சார்பில் குடும்பநல நிதியுதவியாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், மலையனூர் செக்கடி ஊராட்சிக் கழகச் செயலாளர் சி.கோவிந்தன்- ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதியும், ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான காந்திமதி கோவிந்தன் தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு “ஜெய்ஜீவன்’’ என்றும், பெண் குழந்தைக்கு “ஜெயஸ்ரீ’’ என்றும் பெயர் சூட்டி, குழந்தைகளின் உச்சிமோந்து ஆசி வழங்கினர்.

நம் அனைவரது நெஞ்சங்களிலும் நிரந்தரமாகக் குடியிருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கும், குடும்பநல நிதியுதவியினை பெற்றுக்கொண்டவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை கண்ணீர் மல்க தெரிவித்துக் கொண்டனர்.

அடுத்ததாக, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து சிறப்பித்தனர். கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான பா. வளர்மதியால், கழக இலக்கிய அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினர்.

கழக அமைப்புச் செயலாளரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். இந்த முகாமில், பொது மருத்துவம், இருதய சிறப்பு பரிசோதனை, தோல், கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, மூட்டு வலி, எலும்பு முறிவு சிகிச்சை, ஈ.ஜி.சி, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு கண்டறிதல் சித்த மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டு, உரிய மருந்து மாத்திரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்த மருத்துவ முகாம் 26.2.2020 வரை நடைபெற உள்ளது.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன்உசேன் ஏற்பாட்டின்பேரில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் அம்மா அவர்களின் பிறந்த நாளையொட்டி தயார் செய்யப்பட்டிருந்த 72 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் வழங்கினர்.

இன்றைய நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தலைமைக் கழக வளாகத்தை ஒட்டியுள்ள சாலைகளின் இருமருங்கிலும் கழகக் கொடித் தோரணங்கள், குருத்தோலைகள் அழகுற அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அதே போல், சாலையின் இருமருங்கிலும் கழக உடன்பிறப்புகள் கழகக் கொடியினையும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கக் கொடியினையும் தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் அம்மாவின் பிறந்தநாளை கழக நிர்வாகிகள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர். கிளைக்கழகங்கள் தோறும் அம்மாவின் திருவுருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்காங்கே இரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டந்தோறும் ஏழை, எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.