தற்போதைய செய்திகள்

ஆவடியில் ஸ்மார்ட் டைடல்பார்க் – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

திருவள்ளுர்

ஆவடியில் ஸ்மார்ட் டைல்பார்க் அமைவதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம், திருநின்றவூர் பேரூராட்சியில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ் ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தினை தமிழ் ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணைக்கிணங்க, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்டம், திருநின்றவூர் பேரூராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தத்தினை திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 32.50 லட்சம் மற்றும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் ஆக மொத்தம் ரூ. 42.50 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது.

மேலும், இது போன்ற திருநின்றவூர் பேரூராட்சியில் சாலை, குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்படும். முதலமைச்சர் அவர்களின் அரசு அனைத்து மக்களுக்கும், அனைத்து விதத்திலும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை ஏழை-எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக பல சீரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

மாநிலத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான முதியோர் ஓய்வூதியத்தினை வழங்குவதற்கு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 32 கோடியில் பருத்திப்பட்டு பசுமை பூங்கா அமைக்கப்பட்டு, படகு சவாரி குலாம் அமைக்கப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், ஆவடியில் 30,000 த்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஸ்மார்ட் டைடல் பார்க் அமைக்கப்படவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.