தற்போதைய செய்திகள்

கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே நடைபாதை அமைக்கும் பணி மும்முரம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு…

கரூர்:-

கரூர் திருமாநிலையூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தை கரூர் வைசியா வங்கியின் பங்களிப்புடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்காவுடன் கூடிய நடைபாதையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

கரூர் நகரத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையிலும் பழைய அமராவதி பாலத்தை சிறந்த முறையில் சீரமைக்க வேண்டும் என்று மேற்கொண்ட சீரிய முயற்சியின் விளைவாக, கரூர் வைசியா வங்கியின் ஒத்துழைப்போடும் நிதி பங்களிப்போடும் ரூ.1 கோடி மதிப்பில் பழைய அமராவதி பாலம் புனரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு பூங்காவுடன், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சிறந்த இடமாக உருவாக்கப்பட இருக்கின்றது.

இந்தப்பாலம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதித்து, இரண்டு பகுதிகளிலும் பாதுகாப்புக்காக உயரிய கம்பிகள் பொருத்தப்படவுள்ளது. மேலும், பாலத்தில் நடுவில் ஆங்காங்கே பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கரூர் வைசியா வங்கியின் பங்களிப்புடன் சாய்வு நாற்காலிகளும், மின்விளக்குகளும் பொறுத்தப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாது, பூங்காவின் நுழைவுவாயில் அருகே பொதுமக்களும், சிறுவர்களும் மகிழும் வகையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்காக கழிப்பிட வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படவும் உள்ளது. பூங்கா பாதுகாப்பிற்காக காவலர் நியமிக்கப்படவுள்ளார். இந்த பொழுதுபோக்குப்பூங்காவும், நடைபயிற்சிக்கான பாதையும் அமைக்கும் பணி இன்னும் மூன்று மாதத்தில் முடிக்க திட்மிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராபள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் வருவாய் கோட்டாட்சியிர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) இராஜேந்திரன், கரூர் வைசியா வங்கி பொது மேலாளர் சாய்ராஜ், பொறியாளர் ஜெய்சங்கர், வட்டாட்சியரகள் அமுதா, தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பணை பண்டகசாலை தலவைர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் வி.சி.கே.ஜெயராஜ, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.