தற்போதைய செய்திகள்

24 மணி நேர குடிநீர் விநியோகம்,கோவை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது : அதிகாரிகளுக்கு அமைச்சர் பாராட்டு…

கோவை:-

அகில இந்திய அளவில் மாநகராட்சியால் செயல்படுத்தும் திட்டங்களில் மக்களுக்கு பயன் தரக்கூடிய அவசியமான சிறந்த திட்டம் என்ற அடிப்படையில் கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு ஸ்காச் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்காச் என்கிற நிறுவனம் ஆட்சி நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் அரசு துறைகள். தன்னார்வ அமைப்புகளின் திட்ட அறிக்கையை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருகிறது.

நடப்பாண்டு இதற்கான விழா டெல்லியில் சில நாட்களுக்கு முன் நடந்தது நாடு தழுவிய அளவில் மாநகராட்சி மற்றும் அரசு துறைகள் தன்னார்வ அமைப்பினர் என 300க்கும் மேற்பட்ட திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை குழுவினர் ஆய்வு செய்து அரையிறுதிப் போட்டிக்கு தேர்வு செய்தனர்.

தமிழக அளவில் கோவை மாநகராட்சி சமர்ப்பித்த 4 திட்ட அறிக்கைகள் தேர்வாகின. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளை தனியாக பெற்று கவுண்டம்பாளையத்தில் நவீன முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் குறித்த அறிக்கை ‘‘என் குப்பை என் பொறுப்பு’’ என்கிற தன்னார்வ அமைப்பு மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் செயல்படுத்தப்படும் பணிகள் ரிசர்வ் சைட்டுகள் பூங்கா வளாகங்களில் ‘‘மியாவாக்கி’’ முறையில் மரக்கன்று நடுதல் மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துதல் தொடர்பான திட்ட அறிக்கைகள் அரையிறுதிப் போட்டியில் தேர்வாகின.

மோட்டார் இல்லாமல் இரண்டாம் மாடிக்கு தண்ணீர்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பழைய மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் பரிட்சார்த்த முறையை இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்த இருக்கிறோம். இரண்டாவது மாடியில் இருக்கும் வீட்டில் மோட்டார் இல்லாமல் தண்ணீர் வரும் அளவுக்கு அழுத்தம் இருக்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதன்மூலம் மோட்டார் பொருத்துவது தவிர்க்கப்படும். மின் பயன்பாடு குறையும் என்றனர்.

அமைச்சர் பாராட்டு

அகில இந்திய அளவில் மாநகராட்சியால் செயல்படுத்தும் திட்டங்களில் அதிக மக்களுக்கு பயன் தரக்கூடிய அவசியமான சிறந்த திட்டம் என்ற அடிப்படையில் 24 மணி நேர குடிநீர் திட்டம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை மாநகராட்சி குழுவினர் பெற்றுக்கொண்டனர். விருதை பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாட்டை பாராட்டினார்.