ஈரோடு

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதி இல்லை – கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ பேச்சு…

ஈரோடு:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் ரூ 5. கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற அவைக் குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பின்னர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ பேசியதாவது :-

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தார் சாலைகள் அமைப்பதற்காக முதலமைச்சரின் சிறப்பு நிதியாக ரூ. 40 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். அந்த நிதியில் ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ. 24 கோடி மதிப்பிலும், கிழக்கு தொகுதியில் ரூ.16 கோடி மதிப்பிலும் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. காசிபாளையம் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ள. ஈரோடு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ. 67.76 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைந்து உள்ளது. அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வெளி நாட்டுப் பயணம் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. திமுகவினர் குடும்ப நலனுக்காக மட்டுமே வெளிநாடு சென்றனர். முதலமைச்சர் மக்கள் நலனுக்காக வெளிநாடு சென்றார். இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும்
இவ்வாறு கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காசிபாளையம் பகுதி கழக செயலாளர்கள் கே.பி.கோவிந்தராஜன், சூரம்பட்டி ஆர்.ஜெகதீசன், கழக நிர்வாகிகள் நேதாஜி கணேசமூர்த்தி, பிரஸ் மணி,கேபிள் ரமேஷ், பாவை அருணாசலம், ஈரோடு குணசேகரன், ஆனந்தராஜ், எஸ்.டி.தங்கமுத்து, பாலசந்திரன், வார்டு செயலாளர் சிவக்குமார், கண்ணன், ஜீவா ரவி, குட்டி (எ) சண்முகம், பாலசுப்பிரமணி,ராஜா (எ) சந்திரன், சங்கமேஸ்வரன், உஷா, தங்கராசு, மணி (எ) பாலசுப்பிரமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.